Published : 11 Jul 2023 08:03 PM
Last Updated : 11 Jul 2023 08:03 PM
புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டு 5 ஆண்டுகளாகின்றன. ‘ரேஷன் அரிசிக்குப் பதிலாக, பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்’ என்று கூறப்பட்டு, முன்பு செலுத்தப்பட்ட பணமும் சரியாக செலுத்தப்படுவதில்லை. அரிசி, பருப்பு தொடங்கி பொருட்களின் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளதால் புதுச்சேரி மக்கள் தவிக்கின்றனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் மொத்தம் 507 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் பாப்ஸ்கோவின் கீழ் 47-ம், தனியாக 26 கடைகளும் நடத்தப்படுகின்றன. மீதியுள்ள கடைகள் கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதில் 800 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில், புதுச்சேரி ரேஷனில் இலவச அரிசி மட்டுமே விநியோகப்பட்டது. அதுவும் மாதந்தோறும் சரியாக விநியோகிக்கப்படாமல் இருந்தது. பல மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியமும் தராமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இலவச அரிசி தரும் கோப்புக்கு அப்போதைய ஆளுநர் கிரண்பேடி அனுமதி தரவில்லை என்று ஆளும் காங்கிரஸ் அரசு புகார் தெரிவித்தது.
அதே நேரத்தில், ரேஷன் அரிசிக்குப் பதிலாக பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் தரும் திட்ட கோப்புக்கு அப்போதைய ஆளுநர் அனுமதி தந்ததால், படிப்படியாக ரேஷன் கடைகள் தனது செயல்பாட்டை இழந்தன. இந்தச் சூழலில் கரோனா ஊடரங்கு ஏற்பட்டது.
அப்போது ரேஷன் கடைகள் புதுச்சேரியில் இல்லாததால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர். கரோனா அசாதாரண சூழலில் மத்திய அரசு வழங்கிய அரிசி, கோதுமை பொதுப்பணித்துறை ஊழியர்கள் மூலம் ஆங்காங்கே அரசுப் பள்ளி வளாகத்தில் வைத்து விநியோகம் செய்யப்பட்டது. அதில் சில குளறுபடிகள் நிலவியது.
முக்கியச் சூழலில் ரேஷன் கடைகள் இருந்தால்தான் உணவு பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதை அது உணர வைத்தது. இதையடுத்து நடந்த சட்டப்பேரவைத்தேர்தலில், ‘ரேஷன் கடைகளைத் திறந்து அரிசி, கோதுமை, அத்தியாவசிய பொருட்கள் தரப்படும்’ என்ற வாக்குறுதியை அனைத்துக் கட்சிகளும் முன்வைத்து பரப்புரை மேற்கொண்டது.
தேர்தலில் வென்று ஆட்சியமைத்த என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணியும் இந்த வாக்குறுதியை முன்வைத் திருந்தது. ஆனால் ஆட்சியமைத்து இரு ஆண்டுகளைக் கடந்தாலும் இன்னும் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. முதல்வர் ரங்கசாமியும் சட்டப்பேரவையில் ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தும், இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
ரேஷன் கடை ஊழியர்கள் தரப்பில் இதுபற்றி விசாரித் தபோது, "ஊதியமே பல ஆண்டுகளாக தரவில்லை. போராட்டம் நடத்திப் பார்த்தோம். அனைவரிடமும் முறையிட்டு விட்டோம். ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கினால் அதற்கான நிதியை அளிப்பதாகவும் மத்திய அரசு கடந்த 2015-ல் ஆணை பிறப்பித்துள்ளது.
அதையும் செய்யாமல், ஊதியமும் தராமல் ரேஷன் கடைகளை மட்டும் வைத்துள்ளனர். சண்டிகரில் ரேஷன் கடை ஊழியர்கள் குறைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்றுப்பணி தரப்பட்டுள்ளது. அதேபோல் இங்கும் தரலாம்" என்றனர்."புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டு ஐந்தாறு ஆண்டுகளாகி விட்டன. இலவச அரிசிக்கான பணமும் மாதந்தோறும் சரியாக பயனாளிகள் வங்கிக் கணக்கில் தருவதில்லை.
தற்போது புதுச்சேரியில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், அரிசி, பருப்பு, எண்ணெய் என அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கையே எடுக்கவில்லை. தமிழகத்தில், விலை உயர்வை ஈடுகட்ட ரேஷன் கடைகளில் தக்காளி விற்கின்றனர். உழவர் சந்தைகளில் காய்கறிகள் அதிகளவில் விற்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் இவை குறைந்த விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதையும் செய்யவில்லை; மூடப்பட்டு இருக்கும் ரேஷன் கடைகளைத் திறக்கவும் இல்லை" என்று புதுச்சேரி மக்கள் தங்களது ஆதங்கத்தை முன்வைக்கின்றனர்.
அரசு வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்த போது, "மத்திய அரசிடம் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் நேரடியாக பேசி, ரேஷன் கடைகளை திறக்க அனுமதி கேட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலின் போது பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியில், ‘ரேஷன் கடைகளைத் திறப்போம்’ என்று உள்ளதையும் மத்திய அரசிடம் குறிப்பிட்டுள்ளார். குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் விற்கும் திட்டமும் உள்ளது. படிப்படியாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மத்திய அரசு அனுமதிக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவிக்கின்றனர். ‘ரேஷன் கடைகளை பழையபடி திறப்போம்’ என அரசு தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருவதை கேட்டு, மக்களே சலித்துப் போய் விட்டனர். ஆங்காங்கே கிராமப் பகுதிக்கு முதல்வர், அமைச்சர்கள் செல்லும் போது அவர்களை முற்றுகையிட்டு ‘ரேஷன் கடைகளைத் திறக்க வேண்டும்’ என்று பெண்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனாலும் இது தீராத சிக்கலாகவே நீடிக்கிறது.
புதுச்சேரியைத் தொட்டபடி இருக்கும் பல தமிழக கிராமங்களில், ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்லும் போதும், கர்நாடகம், கேரளம் மற்றும் வட இந்திய மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்குள் புலம் பெயர்ந்தவர்கள் அங்குள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொது விநியோகப் பொருட்களைப் பற்றி கூறும் போதும், “புதுச்சேரியில் இருக்கும் நாங்கள் மட்டும் வேறு நாட்டிலா இருக்கிறோம்!” என்று மக்கள் கேட்பது நம் காதில் விழுகிறது. அரசு நிர்வாகத்தின் காதில்..?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT