Published : 11 Jul 2023 03:45 PM
Last Updated : 11 Jul 2023 03:45 PM

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு அழைப்பு

அறநிலையத் துறை அறிவிப்பு

சென்னை: திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருக்கோயில்களில் சமூக நீதியை நிலைநாட்டவும், இறைவனுக்கு ஆற்றும் சேவையில் அனைவருக்கும் சம வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை நிறைவேற்றிடும் வகையிலும், உரிய பயிற்சிகள் வழங்கிடவும் மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்கள் சார்பில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சார்பில் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளும், ஸ்ரீவில்லிப்புத்தூர், அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் சார்பில் பிரபந்த விண்ணப்பர் பயிற்சி பள்ளியும், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் சார்பில் தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகள் பகுதி நேரம் மற்றும் முழு நேர பயிற்சிப் பள்ளிகளும், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் மற்றும் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களின் சார்பில் வேத ஆகம பாடசாலைகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இப்பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லாமல் பயிற்சியும், ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.3,000/- மற்றும் பகுதி நேரத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கதொகை ரூ. 1500/- வழங்கப்படுகிறது.

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 24 வயதுக்குள்ளும், ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 20 வயதுக்குள்ளும், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 16 வயதுக்குள்ளும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேத ஆகம பாடசாலையில் சேர வயது வரம்பு 12 முதல் 16 வயதுக்குள்ளும் மற்றும் பிரபந்த விண்ணப்பர் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 8 முதல் 18 வயதுக்குள் இருப்பதோடு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

மாணவர் சேர்க்கைக்கான படிவங்களை அந்தந்த திருக்கோயில்களின் அலுவலகத்தில் அலுவலக வேலை நேரத்தில் நேரிலோ அல்லது அந்தந்த திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். இப்பயிற்சிப் பள்ளிகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x