Last Updated : 11 Jul, 2023 03:42 PM

 

Published : 11 Jul 2023 03:42 PM
Last Updated : 11 Jul 2023 03:42 PM

மதுரை குடிநீர் திட்டத்துக்காக தடுப்பணை - லோயர்கேம்ப் பெரியாற்று நீர் திசைமாற்றம்

லோயர்கேம்ப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை. படம்:என்.கணேஷ்ராஜ்

கூடலூர்: மதுரை குடிநீர் திட்டத்துக்காக லோயர்கேம்ப் பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஆற்றின் நீரோட்டம் திசை மாற்றப்பட்டுள்ளது.

மதுரை மாநகரின் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கூடுதல் குடிநீர் திட்டம் மூலம் இதை ஈடுகட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி தேனி மாவட்டம் லோயர்கேம்ப்-ல் முல்லை பெரியாற்று நீரை ராட்சத குழாய் மூலம் மதுரைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டது.

இதற்காக ரூ.1,295.76 கோடி மதிப்பில் ‘அம்ரூத் 3’ எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு மே 18-ம் தேதி லோயர்கேம்ப் சலவைத்துறை பகுதியில் இத்திட்டத்துக்கான பூமிபூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அங்கு தலைமை நீரேற்றும் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக 25 மீ.நீள, அகலம், 22 மீட்டர் ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு தரைமட்ட ராட்சத தொட்டி கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதில் 3 லட்சம் லிட்டர் நீரைத் தேக்க முடியும்.இத்தொட்டியில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பில் இருக்கும் வகையில் அருகிலேயே தடுப்பணையும் தற்போது கட்டப்பட்டு வருகிறது. ஆற்று நீரோட்டத்தின்போது கட்டுமானப் பணியை மேற்கொள்ள முடியாது என்பதால் ஏராளமான மணல் மூட்டைகளை அடுக்கி ஓரப்பகுதியில் ஆற்றுநீர் செல்லும் வகையில் திசை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. 45 மீட்டர் முதல் 50 மீட்டர் வரை நீளமும், 4 மீட்டர் உயரத்திலும் இந்தத் தடுப்பணை அமைய உள்ளது. இதன் ஓரப்பகுதியில் தண்ணீர் வழிந்தோடும் வகையில் இரண்டு ஷட்டர்களும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதத்தில் இப்பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின்மூலம் கோடையிலும் 3 லட்சம் லிட்டர் நீரை இருப்புவைத்து ராட்சத குழாய்கள் மூலம் மதுரைக்குக் கொண்டு செல்ல முடியும்.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது. நீர் ஊற்று பீறிட்ட நிலையில் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி கான்கிரீட் தளமிட்டு அடித்தளப் பணிகள் முற்றிலும் முடிவடைந்து விட்டது. தடுப்பணையைத் தொடர்ந்து தரைத்தள ராட்சத நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணியும் விரைவில் நிறைவடையும்.

150 கிமீ. தூரத்துக்கு ராட்சத குடிநீர் குழாய் பதிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இக்குழாயில் செல்லும் ஆற்றுநீர் திண்டுக்கல் மாவட்டம் பண்ணைப்பட்டியில் சுத்திகரிப்பு செய்து மதுரைக்குக் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் தினமும் 125 மில்லியன் லிட்டர் குடிநீர் மதுரை மாநகருக்குக் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x