Published : 11 Jul 2023 01:12 PM
Last Updated : 11 Jul 2023 01:12 PM

கும்பகோணம் | தீ விபத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகள் 94 பேரின் நினைவிடத்தில் ஓவியக் கண்காட்சி

கும்பகோணம்: கும்பகோணம் பாலக்கரையில், பள்ளி தீவிபத்தினால் உயிரிழந்த 94 பள்ளிக் குழந்தைகளின் நினைவிடத்தில் இளைஞர் அரண் அமைப்பு சார்பில் ஒவியக் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியை மேயர் க.சரவணன் தொடங்கி வைத்தார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, இளைஞர் அரண் தமிழ்நாடு அமைப்பாளர் சைமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க அமைப்புச் செயலாளர் மகிழன், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், கல்வி பாதுகாப்பு, அரசுக் கல்லூரியில் மாணவர்களுக்கான உரிமைகள், நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கைகள் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தேசிய விருது பெற்ற விஸ்வம் தலைமையிலான 22 ஓவியர்கள் வரைந்த 22 ஒவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

முன்னதாக நினைவு மண்டபத்திலுள்ள உயிரிழந்த குழந்தைகளின் பெயர் பட்டியல் முன்பு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு செய்தியாளர்களிடம் கூறியது, “நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கைகள் உள்ளிட்டவற்றை எதிர்ப்பதற்காகக் கடந்த ஜூலை 1ஆம் மற்றும் 2ஆம் தேதிகளில் சென்னையிலும், அதனைத் தொடர்ந்து கும்பகோணத்திலும் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டது. மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது தமிழக மக்களின் கல்விக் கண்களை அவிப்பதாக உள்ளது.

தமிழக அரசு இந்த கொள்கையை எதிர்ப்பதுடன், தமிழகத்திற்கு தனி கல்விக் கொள்கை வேண்டும் என திட்டமிட்டு அதற்கான குழுவையும் அமைத்துள்ளது. நீட் தேர்வை எதிர்ப்பதுடன், புதிய துறைகளில் இந்தியமயம், வணிகமயம், சனாதானமயம் கல்வித் துறையில் நுழைந்து கொண்டிருக்கிறது. இதனை எதிர்த்துத் தடுப்பதற்காகவும், 2004ஆம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பள்ளி தீவிபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளை நினைவுகளை கூறும் வகையிலும் வரும் 16-ம் தேதி கும்பகோணம் இளைஞர் அரண் சார்பில் கல்வி உரிமை பேரணி மற்றும் மாநாடு நடைபெற இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x