Published : 11 Jul 2023 11:20 AM
Last Updated : 11 Jul 2023 11:20 AM

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி ஆக.1ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: ஓபிஎஸ் அறிவிப்பு

ஓ.பன்னீர் செல்வம்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி வரும் ஆக.1ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், "ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாகவும், ஜெயலலிதா மிகவும் நேசித்த வசிப்பிடமாகவும் இருந்து வந்தது கோடநாடு பண்ணை பங்களா. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2017, ஏப்ரல் 24ஆம் தேதியன்று இரக்கமற்ற ஓர் அரக்கர் கூட்டம், அந்த கோடநாடு தோட்டத்திற்குள் புகுந்து அங்கே காவல் காத்து வந்த ஓம்பகதூர் என்கிற காவலாளியை கொலை செய்து, கிருஷ்ணபகதூர் என்னும் காவலாளியை கொடுங்காயப்படுத்தி, கொலை கொள்ளையை நிகழ்த்திய சம்பவம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதாக சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் கோடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. மற்றும் கணினி உள்ளிட்ட பொறுப்புகளை நிர்வகித்து வந்த தினேஷ் என்கிற இளைஞர், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களை ஏற்பாடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சயான் என்பவரது மனைவி, மகள், மேலும் இந்தக் குற்றம் நிகழ்ந்த காலத்தில் கொடநாடு சரக காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் உள்ளிட்ட பலரது சந்தேக மரணங்கள், மர்ம விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று, மொத்தமாக 6 உயிர்கள் பறி போய்விட்ட நிலையில், இந்தக் கொடூரங்கள் நடைபெற்று ஏறத்தாழ 6 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவும் இல்லை, இந்தக் குற்றத்திற்கான நோக்கம், இந்த பாவக் காரியத்தை பின் இருந்து இயக்கியவர்கள் யார் என்பதையெல்லாம் கண்டறிவதற்கும், அவர்களை கடுமையாக தண்டிப்பதற்கும் முறையான நடவடிக்கைகள் இதுவரை உறுதியோடு மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாகவே கருதப்படுகிறது.

விசாரணை மாடங்களும், விசாரிக்கப்படும் அமைப்புகளும் மாறுகிறதே தவிர இந்த வழக்கின் சூத்திரதாரி யார் என்பதும், இந்தக் குற்றத்தை முன்னின்று நடத்திய கொடூரன் யார் என்கிற முடிச்சு இன்றுவரை அவிழ்க்கப்படவில்லை. இவை யாவிற்கும் மேலாக மிகப் பிரசித்திப் பெற்ற தமிழகத்தின் செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, கொடநாடு கொலை, கொள்ளை குறித்து புலனாய்வு விசாரணை ஒன்றை நடத்தி கொடநாடு கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்திருக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களை அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று கலந்துரையாடியதில் இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்ய ஒருவர் தங்களிடம் வந்து பேரம் பேசியதாக அவர்கள் புகைப்படத்தைக் காட்டி அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட பிறகும்கூட இன்று வரை அதன்மீது எந்தவிதமான தொடர் நடவடிக்கைகளும், விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தருகிறது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய பல உயிர்கள் பறிபோன நிலையிலும், அந்தக் கொடூர நிகழ்வில் உயிரோடு தப்பித்து நேபாளத்திற்குச் சென்ற கிருஷ்ணபகதூர் என்கிற காவலாளியை இன்று வரை அழைத்து வந்து, அவர் கண்ணால் கண்ட அச்சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை ஏதும் காவல் துறையால் நடத்தப்படாமல் இருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை சட்டமன்றம் தொடங்கி, பொது வெளியிலும், குறிப்பாக 2021 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் இச்சம்பவம் குறித்து பல சந்தேகங்களை மக்கள் முன் வைத்து பேசியவர் இன்றைய முதல்வரும், அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின்தான் என்பதையும், ஆட்சிக்கு வந்து 90 நாட்களுக்குள் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிப்போம் என்று மு.க. ஸ்டாலின் மக்களிடம் வழங்கிய வாக்குறுதியையும் நாடறியும்.

அப்படி பேசியது மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையிலும் இதனை பிரதான வாக்குறுதியாக திமுக அச்சிட்டு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஏறத்தாழ இரண்டரை வருடங்களை தொடும் நிலையில், இன்று வரை இந்த வழக்கின் முடிச்சு அவிழ்க்கப்படவில்லை, உண்மைக் குற்றவாளிகளும், அதற்கு காரணமான கிரிமினல் பேர்வழிகளும் தண்டிக்கப்படவும் இல்லை என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களிடம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் கடுமையான விமர்சனங்களையும், ஆட்சி நடத்தும் திமுகவின் மீதும் கடுமையான கோபத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் மர்ம மரணங்களுக்கு காரணமானவர்களை, குறிப்பாக இவற்றிக்கெல்லாம் மூளையாக செயல்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தராதது கோடநாடு பங்களாவை ஆலயமாக கருதிக் கொண்டிருக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களிடையேயும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் நடைபெற்ற மக்கள் நலத் திட்டங்களால் பயன்பெற்ற கோடானுகோடி மக்களிடையேயும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை அனைத்திந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில், இதனை ஆளும் திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது அனைவரின் கடமையாகும்.

தன் அரசியல் வாழ்வின் கடைசி வினாடி வரை சட்டம்-ஒழுங்கை பேணிக் காப்பதுதான் தன் இலட்சியம் என வாழ்ந்த ஓர் ஒப்பற்ற தலைவர் மரணம் அடைந்து ஆறு மாதத்திற்குள்ளேயே அவர் வசித்த பங்களாவிற்குள்ளேயே கொலையையும், கொள்ளையையும் நடத்தியவர்கள் சட்டம்-ஒழுங்குக்கும், தமிழக காவல் துறையின் மாண்புக்கும் சவால் விடுத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உள்வாங்கிக் கொண்டு, அந்த கோடநாடு கொலை, கொள்ளை குறித்து ஆளும் திமுக அரசு கூடுதல் கவனமும், அதி முக்கியத்துவமும் கொடுக்காமல் தூங்கி வழிவதைக் கண்டித்தும், இந்த வழக்கினை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திரரவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில், அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் 01-08-2023 அன்று காலை 10-30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்." இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x