Published : 11 Jul 2023 05:56 AM
Last Updated : 11 Jul 2023 05:56 AM

தமிழகம் முழுவதும் அண்ணாமலை பாதயாத்திரை - ராமேசுவரத்தில் ஜூலை 28-ல் அமித் ஷா தொடங்கிவைக்கிறார்

அண்ணாமலை பாதயாத்திரைக்கு பாதுகாப்பு கோரி மனு அளிக்க வந்த பாஜகவினர்

சென்னை: ஊழலுக்கு எதிராக ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பிலான பாதயாத்திரையை தமிழகம் முழுவதும் மேற்கொள்ள உள்ளதாக அண்ணாமலை அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வருகின்றனர்.

ராமேசுவரத்தில் தொடங்கும் பாதயாத்திரை சென்னையில் நிறைவடைகிறது. வரும் 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராமேசுவரத்தில் பாத யாத்திரையை தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து 6 மாதங்கள் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ள அண்ணாமலை, சென்னையில் ஜன. 11-ம் தேதி பாதயாத்திரையை முடிவு செய்கிறார்.

இந்நிலையில், பாதயாத்திரைக்கு பாதுகாப்பு கோரி, டிஜிபி சங்கர் ஜிவாலிடம் பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் பால் கனகராஜ், சக்கரவத்தி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் நேற்று மனு அளித்தனர்.

225 ஊர்கள்: தமிழகம் முழுவதும் 6 மாதங்கள் பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை, 225 ஊர்களில் மக்களை சந்திக்கிறார். பாதயாத்திரை தொடங்கிய 110-வது நாளில் சென்னையில் பாதயாத்திரையை நிறைவு செய்கிறார். ஆக. 7-ம் தேதி மதுரையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசுகிறார். 50-வது நாள் நடைபயணம் பரமத்தி வேலூரிலும், 100-வது நாள் நடைபயணம் வந்தவாசி மற்றும் உத்திரமேரூரிலும் நடைபெற உள்ளது.

முதல்வரை மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டு அண்ணாமலை கடிதம்: விழுப்புரம், செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 10-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் சமீபத்தில் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்தும், மாற்று வழியில் வருவாய் ஈட்டுவது குறித்தும் முதல்வரிடம் விரைவில் வெள்ளை அறிக்கை பாஜக சார்பில் வழங்கப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்த வெள்ளை அறிக்கையை தயார் செய்த அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, அதை சமர்ப்பிக்க, ஜூலை 11, 12, 13-ம் தேதிகளில், ஏதாவது ஒரு நாளில் நேரம் ஒதுக்குமாறு கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x