Published : 11 Jul 2023 08:46 AM
Last Updated : 11 Jul 2023 08:46 AM

திரவுபதி அம்மன் கோயிலுக்குள் சட்டப்படி அழைத்துச் செல்லாவிடில் போராட்டம்: மேல்பாதி கிராம மக்கள் அறிவிப்பு

விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பிரவீணா குமாரி முன்பு மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விசாரணைக்கு ஆஜராகினர்.

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்லக் கூடாது என மற்றொரு சமுகத்தைச் சேர்ந்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இருசமூக மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் வகையில், 145-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பிரச்சினைக்குள்ளான திரவுபதி அம்மன் கோயிலை கடந்த ஜூன் 7-ம் தேதி வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

கோயில் இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என இரு சமூக மக்களும் பரஸ்பரம் போட்டி போட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில், அது தொடர்பாக கடந்த ஜூன் 9-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருத்தரப்பினரிடையேயும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

இதிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து 2-ம் கட்ட விசாரணை கடந்த 7-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது ஒரு தரப்பைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் 5 பேருக்கு மட்டும் சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு அவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீணா குமாரி விசாரணை நடத்தினார்.

இதேபோல் மற்றொரு தரப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்களான 5 பேரிடமும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். அப்போது, வரும் 31ம் தேதிக்குள் திரவுபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபாடு நடத்த சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் மேல்பாதி கிராமத்தில் உள்ள அனைத்து பட்டியலின மக்களின் வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடுவோம்;

அதன் பிறகும் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டால் இந்து மதத்தில் இருந்து வெளியேறி ஒட்டுமொத்த பட்டியலின மக்களும் மதமாற்றம் செய்து கொள்வோம் என கோட்டாட்சியர் பிரவீணா குமாரியிடம் தெரிவித்தனர். இதனால் மேல்பாதி கிராமத்தில் மீண்டும் பதற்றம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x