Published : 11 Jul 2023 04:23 AM
Last Updated : 11 Jul 2023 04:23 AM

12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்கள் நியமனம்

துணைத் தலைவர் தாஜுதீன், ராமேசுவரம் என்.ஜே. போஸ்

ராமேசுவரம்: 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மீன்பிடிப்பு மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபடும் மீனவத் தொழிலாளர்களின் விரிவான சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களது நலனை பேணும் பொருட்டும், கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாடு மீனவர் நல வாரியம் அமைக்கப்பட்டது.
மீன்வளத்துறை அமைச்சரை வாரியத் தலைவராகக் கொண்ட இந்த ஆணையத்துக்கு எட்டு அலுவல் மற்றும் 12 அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். 2009-ம் ஆண்டுடன் இவர்களின் இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு பதவி நீட்டிக்கப்பட்டது.

தமிழ்நாடு மீனவர் நல வாரியம் தொடங்கப்பட்டது முதல் 6 பொதுக்குழு கூட்டங்களே நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து இதுவரை கூட்டம் நடைபெறாமல் வாரியத்தின் செயல்பாடுகள் முடங்கியது.

கடந்த 12 ஆண்டுகளாக முடங்கி இருந்த தமிழ்நாடு மீனவர் நல வாரியம் தற்போது மீண்டும் செயல்பட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. தொடர்ந்து தமிழ்நாடு மீனவர் நல வாரியத்துக்கு புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் "தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் துணைத் தலைவராக தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம், தாஜுதீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 11 உறுப்பினர்கள் விபரம் வருமாறு: ராமேசுவரம் என்.ஜே. போஸ், தூத்துக்குடி அந்தோணி ஸ்டாலின், பெரியதாழை லெனின், வீரபாண்டியன் பட்டணத்தைச் சேர்ந்த ஜெபமாலை பர்னாந்து, கன்னியாகுமரி மாவட்டம் நீரோடியை சேர்ந்த ஜோஸ், நாகை மாவட்டம், அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த சேகர் மற்றும் மனோகரன், கடலூர் மாவட்டம் பெரியகுப்பத்தைச் சேர்ந்த செல்வபாரதி, சென்னை காசிமேடுவைச் சேர்ந்த கணேஷ், விழுப்புரம் பன்னீர் செல்வம், தேனி மாவட்டம் பெரிய குளத்தைச் சேர்ந்த முருகன் ஆகியயோர் அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதியதாக தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு மீனவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x