Last Updated : 11 Jul, 2023 01:45 AM

 

Published : 11 Jul 2023 01:45 AM
Last Updated : 11 Jul 2023 01:45 AM

தமிழக அளவில் சேலத்தில் முதல் முறையாக சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டம் துவக்கம்

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்  தொடக்கி வைத்து, சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனைப் பெட்டகத்தினை செவிலியர்களுக்கு வழங்கினார். உடன் எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன்.

சேலம்: தமிழக அளவில் முதல் முறையாக சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். அப்போது, தமிழகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் சிறுநீரக பாதிப்பு கண்டறியும் பரிசோதனை பெட்டகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: சிறுநீரக செயலிழப்பை தொடக்க நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை தமிழகத்தில் முதல் முறையாக சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும். சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு மற்றும் புற்றுநோய் இந்த மூன்று நோய் பாதிப்பும் உலகளவில் அச்சுறுத்தும் நோய்களாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, இந்த மூன்று நோய்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நோய் பாதித்தவர்கள் தற்காத்துக் கொள்ள பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சிறுநீரக பாதிப்பை தொடக்க நிலையில் கண்டறிந்தால் பாதிக்கப்பட்ட நபரை எளிதாக குணப்படுத்த இயலும். இதுவே, நோயின் தன்மை அதிகரித்து சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுவிட்டால் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு நிலைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.

தமிழகத்தில் சிறுநீரகம் பாதித்து, பலரும் சிறுநீரக தானத்துக்காக காத்திருக்கின்றனர். நோய் வருமுன் காப்பது அரசின் கடமை. எனவே, இந்த சிறப்பான திட்டத்தை தமிழகம் முழுவதும் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. சிறுநீரகத்திலிருந்து வெளியேறும் புரதத்திலிருந்து சிறுநீரக செயலிழப்பை கண்டறியும் பரிசோதனை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழகத்தில் உள்ள 8,213 அரசு துணை சுகாதார நிலையங்கள், 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புர ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சிறுநீரக பாதிப்பு கண்டறியும் பரிசோதனை பெட்டகம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் காடையாம்பட்டியில் இந்நிகழ்ச்சியின் வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் தற்போது வரை 1 கோடியே 54 ஆயிரம் நபர்கள் பயன்பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் 29,21,952 நபர்கள் இத்திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில், சேலம் எம்பி பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x