Published : 10 Jul 2023 10:31 PM
Last Updated : 10 Jul 2023 10:31 PM

சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியில் நீடிக்கும் மந்த நிலை: அதிகாரிகள் கூறுவது என்ன?

கோப்புப்படம்

சென்னை: சென்னையில், மழைநீர் வடிகால்கள் துார்வாருவதில் மந்தநிலை நீடித்து வருகிறது. மாநகராட்சி தொடர்ந்து அலட்சியம் காட்டும் பட்சத்தில், 2021ம் ஆண்டைப்போல், இந்தாண்டும் மழை வெள்ளத்தில் சென்னை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டப்போது, 2021ல் பருவமழையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடானது. குறிப்பாக, மாம்பலம் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, மாம்பலம், தி.நகர், அசோக்நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கின. அதேபோல், கொளத்துார், புளியந்தோப்பு, வியசார்பாடி உள்ளிட்ட பகுதிகளும் மழை வெள்ளத்தில் பாதித்தன. அப்போது, மழைநீர் வடிகால் கட்டமைப்பு இருந்த பகுதிகளிலும், மழைநீர் தேங்கியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த மழை வெள்ள பாதிப்புக்கு திமுக, அதிமுக, ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டினர். அதைதொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளால் 2022 பருவமழையில் வெள்ள பாதிப்பு பெரியளவில் தவிர்க்கப்பட்டது. மழையின்போது மழைநீர் தேங்கிய பகுதிகளிலம் மாநகராட்சி அதிகாரிகளின் முயற்சியால் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ‘ரெடிமேட்’ கால்வாய் அமைக்கப்பட்டு நீர் அகற்றப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், அதிகாரி திருபுகழ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி சென்னையில் மழைநீர் வடிகால், வடிகால் தொட்டி ஆகிய பகுதிகளில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை சுத்தப்படுத்த வேண்டும். மேலும், பருவமழைக்கு முன்னதாக ஜூன் மாதத்தில் இருந்து மழைநீர் வடிகாலை முழுமையாக துார்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என, பரிந்துரைந்திருந்தது.

அந்த பரிந்துரையை செயல்படுத்த மாநகராட்சி பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனால், தற்போது வரை மழைநீர் வடிகால்கள் துார்வாருவதில் மந்தநிலை நீடித்து வருகிறது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: "கடந்த 2021ல் தாமதமாகவே மழைநீர் வடிகால் துார்வாரப்பட்டது. அந்தாண்டு நவம்பர் மாதம் முதல் மழை அதிகளவில் பெய்யத் துவங்கியது. பெரும்பாலான வடிகால்கள் முழுமையாக துார்வாரப்படாதால், பல இடங்களில் நீர் செல்ல வழியின்றி தேங்கியது. தற்போதும் அதே நிலைதான் உள்ளது. மேலும், பெரும்பாலான கால்வாய்களுக்கு இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது.

சில இடங்களில் மட்டுமே துாரர்வாரப்படுகிறது. தற்போது பருவநிலை மாற்றத்தால் எந்த மாதம் முதல் அதிகளவில் மழை பொழியும் என்று தெரியவில்லை. மாநகராட்சி தொடர்ந்து அலட்சியம் காட்டும் பட்சத்தில், 2021ம் ஆண்டைப்போல், இந்தாண்டும் மழை வெள்ளத்தில் சென்னை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவற்றை தவிர்க்க உடனடியாக மழைநீர் வடிகால்களை துார்வார மாநகராட்சி உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி, பிரியாவிடம் கேட்டபோது, "சென்னையில் மழைநீர் வடிகால் துார்வாருவதற்கான முதற்கட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி முதல் துார்வாரும் பணிகள் துவங்கப்படும். தற்போது சில இடங்களில் துார்வாரப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து, செப்டம்பர், அக்டோபர், மாதங்களில் இரண்டாம் கட்ட மழைநீர் வடிகால் துார்வாரும் பணிகள் நடைபெறும். அதனால், வெள்ள பாதிப்பு ஏற்படாது. அனைத்து பகுதிகளையும் கண்காணித்து பணிகள் மேற்கொண்டு வருகிறோம்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x