Published : 10 Jul 2023 09:05 PM
Last Updated : 10 Jul 2023 09:05 PM
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மிட்டஅள்ளி ஊராட்சியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்பாட்டுக்கு வராததால், பாதுகாப்பான குடிநீருக்கு மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மிட்டஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் தாசம்பட்டி, கதிரிபுரம், மேல்மக்கான், பாரதகோயில், மிட்டஅள்ளி, தொட்டிப்பள்ளம், அங்கினாம்பட்டி, வன்னியர் நகர், மாட்டுக்காரன் கொட்டாய், ஜீவா நகர், எம்ஜிஆர் நகர், மிட்டஅள்ளி புதூர் உள்ளிட்ட 22-க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீரில் புளோரைடு பாதிப்பைக் குறைக்கும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த மச்சிகண்ணன் நகர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.
இத்தொட்டியில் நீரேற்றப்பட்டு இந்த ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள, ‘சின்டெக்ஸ்’ தொட்டி மூலம் மக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான அனைத்து கட்டமைப்புப்பணிகளும் நிறைவடைந்து 7 ஆண்டுகளாகியும் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இதனால், இத்திட்டத்துக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி புறாக்களின் வாழ்விடமாக மாறிப்போனது. ‘சின்டெக்ஸ்’ தொட்டிகள் வெயிலுக்கும், மழைக்கும் வீணாகி வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் சிலர் கூறியதாவது: எங்கள் கிராமத்துக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதுவரையில் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால், வழக்கம்போல புளோரைடு பாதிப்புள்ள நிலத்தடி நீரைப் பருகும் நிலை நீடிக்கிறது.
இப்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்று நீரே எங்களின் குடிநீர்த் தேவைக்குக் கைகொடுத்து வருகிறது. இதற்காக தினசரி 2 மணி நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்வோர் குறிப்பிட்ட நேரத்துக்குச் செல்ல முடியாத துயரத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், விவசாயக் கிணறுகளில் போதிய படிக்கட்டு வசதிகள் இல்லாததால் அச்சத்துடன் தண்ணீர் எடுத்து வருகிறோம். மேலும், தென்பெண்ணை ஆற்று நீரும் மாசடைந்து குடிக்கப் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. இதுதொடர்பாக உள்ளாட்சி அதிகாரிகளிடம் கேட்டால், ‘மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீரேற்ற முடியவில்லை’ என ஒற்றை வரியில் பதில் அளிக்கின்றனர்.
இதற்கு மாற்றாக குட்டிகவுண்டனூர் பனந்தோப்பு பகுதிக்கு வரும் ஒகேனக்கல் நீர் இணைப்பிலிருந்து குடிநீரை வழங்கக் கோரிக்கை விடுத்தால், பதில் இல்லை.
எனவே, எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வழங்க ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைந்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
‘சுத்தமான குடிநீரும், கழிவறை வசதியும் உலகில் உள்ள அனைவரின் அடிப்படை மனித உரிமை’ என ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தும் நிலையில், அரசும் பாதுகாப்பான குடிநீர் வழங்க பல கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மிட்டஅள்ளியில் திட்ட கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் பல ஆண்டாய் 22-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிநீருக்கு பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT