Published : 10 Jul 2023 05:58 PM
Last Updated : 10 Jul 2023 05:58 PM
ஓசூர்: அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையத்திலிருந்து ஒகேனக்கல் வரையான சேதமான சாலையைச் சீரமைக்கவும், அகலப்படுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மற்றும் ஓசூர் பகுதி மக்கள் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு அஞ்செட்டி வழியாகச் சென்று வருகின்றனர். அதேபோல, பென்னாகரம், தருமபுரி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அஞ்செட்டி வழியாக பெங்களூரு, மைசூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் அஞ்செட்டி சாலையில் நாட்றாம்பாளையத்திலிருந்து - ஒகேனக்கல் வரையான சுமார் 20 கிமீ தூரம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இந்நிலையில், மழைக்கு இச்சாலையோரத்தில் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும், குறுகிய ஒரு வழி சாலையாக உள்ள நிலையில், சாலையோரத்தின் இருபுறமும் தார் சாலைக்கும், மண் சாலைக்கும் இடையில் மழைக்கு ஏற்பட்ட அரிப்பால் பெரிய பள்ளமாக மாறியுள்ளது.
இதனால், எதிரும், புதிருமாக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் மண் சாலையில் இறங்கும்போது, வாகனங்கள் நிலை தடுமாறி கீழே விழும் நிலையுள்ளது. மேலும், சாலையில் பல இடங்கள் குண்டும், குழியுமாக தேசமடைந்துள்ளது. இதனால், அஞ்செட்டியிலிருந்து ஒகேனக்கல்லுக்கு 30 நிமிடத்தில் செல்லும் பயண நேரம் ஒரு மணி நேரமாகிறது.
சேதமான சாலையில் செல்லும்போது கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதாகி நடுக்காட்டில் நின்று விடும் நிலையால் வாகன ஓட்டிகள் பரிதவிக்கும் நிலையுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செல்வோர் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கின்றனர். சில நேரங்களில் வனத்திலிருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையில் சுற்றும்போது,
வாகன ஓட்டிகள் சேதமான சாலையில் வாகனங்களை வேகமாக ஓட்ட முடியாமல் உயிர் பயத்துடன் சாலையைக் கடக்கும் நிலையுள்ளது. எனவே, நாட்றாம்பாளையத்திலிருந்து-ஒகேனக்கல் வரையான குறுகிய சாலையை அகலப்படுத்தி, சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலைக் கிராம மக்கள் அதிகம் பயன்படுத்தும் நாட்றாம்பாளையம் சாலை சேதமடைந்திருப்பதாலும், குறுகிய சாலை என்பதாலும், வாகன ஓட்டிகள் இச்சாலையைக் கடக்க மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட எல்லைகளில் உள்ளதால், இரு மாவட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT