Last Updated : 10 Jul, 2023 03:29 PM

 

Published : 10 Jul 2023 03:29 PM
Last Updated : 10 Jul 2023 03:29 PM

கரூர் திமுகவினர் 19 பேரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வருமான வரித் துறையினரின் வழக்கு ஒத்திவைப்பு

உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை.

மதுரை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிட சென்றபோது தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர் 19 பேருக்கு கிழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வருமான வரித்துறை உதவி இயக்குநர் கிருஷ்ணகாந்த், துணை இயக்குநர் யோக பிரியங்கா, ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசராவ் மற்றும் காயத்ரி ஆகியோர் தாக்கல் செய்த மனு: 'கரூரில் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் மாரப்ப கவுண்டர், குணசேகரன், சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோர் வீடுகளில் மே 25-ல் சோதனை நடத்தினோம். இந்த சோதனை குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது.

11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடிக்கும் அதிக பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனை நடந்த போது அசோக்குமார் வீட்டின் முன்பு ஏராளமானோர் கூடினர். அவர்களை அங்கிருந்து கலைந்து போகுமாறு போலீஸார் கூறியும் கேட்கவில்லை. அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் வருமான வரித் துறை அதிகாரிகளை மோசமாக பேசி, தாக்கவும் செய்தனர். எங்களிடமிருந்து லேப்டாப், 5 பென் டிரைவ் ஆகியற்றை பறித்து சென்றனர்.

அந்த பென் டிரைவ்களில் அரசுக்கு சொந்தமான முக்கிய தகவல்கள் இருந்தன. இந்த சம்பவத்தின் போது தமிழக போலீஸார் எங்களுக்கு உதவவில்லை. கூட்டம் அதிகரித்ததால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாங்கள் வெளியேறிவிட்டோம். மறுநாள் சிஆர்பிஎப் வீரர்களின் உதவியுடன் சோதனை நடத்தினோம். பின்னர் எங்களிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்ட லேப்டாப் மற்றும் பென் டிரைவ்கள் திரும்ப தரப்பட்டது. அந்த பென் டிரைவ்களில் தரவுகள் அழிக்கப்பட்டிருந்தன. அவைகள் பார்மெட் செய்யப்பட்டிருந்தன. எடுத்துச் சென்ற பணத்தை திரும்ப வழங்கவில்லை. இது தொடர்பான வழக்கில் பலரை போலீஸார் கைது செய்தனர். அவர்களுக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது ஜாமீன் வழங்க வருமான வரித்துறை சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அந்த எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் கீழமை நீதிமன்றம் ஜாமீன், முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், மோசமான வார்த்தைகளால் திட்டியது, ஆவணங்களை பறித்தது, தரவுகளை அழித்தது உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது சரியல்ல. எனவே இந்த வழக்கில் 19 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன், முன்ஜாமீன்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் பெற்ற 19 பேர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 19 பேர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக அவகாசம் கோரப்பட்டது. அதையேற்று விசாரணையை ஜூலை 17-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x