Published : 10 Jul 2023 09:00 AM
Last Updated : 10 Jul 2023 09:00 AM

கழிவுநீர் கலப்பை தடுக்க ரூ.84 கோடியில் புதிய திட்டம்: பரிசுத்தமாகிறது பக்கிங்ஹாம் கால்வாய்

சென்னை: சென்னை மாநகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறக்கும் வரை விஐபி தொகுதி அந்தஸ்தை பெற்றிருந்தது ஆர்.கே.நகர். ஏழை எளிய மக்கள், குறு, சிறு மற்றும் குடிசைத் தொழில் புரிவோர், மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் பொருளாதாரம், அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தில் பின் தங்கிய பகுதியாகவும் அத்தொகுதி உள்ளது.

இத்தொகுதியை ஒட்டியே கொடுங்கையூர் குப்பைக் கிடங்கும் அமைந்துள்ளது. இப்பகுதியில் பாயும் பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீர் விடப்பட்டு, சுற்றுச்சூழல் சீர்கேட்டுடன் அத்தொகுதி இருந்து வருகிறது.

குறிப்பாக சென்னை குடிநீர் வாரியம் ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் சேகரமாகும் சுமார் 45 மில்லியன் லிட்டர் கழிவுநீரை கொடுங்கையூர் எழில் நகர் மற்றும் கொருக்குப்பேட்டை நேதாஜி நகர் இடையே பாயும் பக்கிங்ஹாம் கால்வாயில் வெளியேற்றி அசுத்தப்படுத்தி வருகிறது.

இந்த விதிமீறல் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்த கழிவுநீர், இப்பகுதி மட்டுமல்லாது, கொருக்குப்பேட்டை, வால்டாக்ஸ் சாலையை ஒட்டிய பகுதிகள், சென்ட்ரல் ரயில் நிலையம், சத்யவாணி முத்து நகர், தீவுத்திடல் வழியாக சென்று கூவம் ஆற்றில் கலந்து, நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது.

இதனால் இப்பகுதிகளும் மற்றும் மெரினா கடற்கரையும் தொடர்ந்து மாசு பட்டு வருகிறது. இவ்வாறு கழிவுநீர் விடப்படுவதால், மேற்கூறிய பகுதிகளில் ஆண்டு முழுவதும் கொசுத்தொல்லை இருந்து வருகிறது. இப்பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருவதுடன், நிலத்தடி நீரின் தரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் விடப்படும் கழிவுநீர் கூவம் ஆற்றில் கலக்கும் நேப்பியர் பாலம் அருகில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நீரின்தரம் பரிசோதிக்கப்பட்டது. அதில் டிடிஎஸ் அளவு ஒரு லிட்டரில் 4,434 மில்லி கிராம், குளோரைடு அளவு 2,549 மில்லி கிராம் அளவு இருந்தது தெரிந்தது. நீரில் டிடிஎஸ் அளவு 2 ஆயிரத்து 100 மில்லி கிராம் அனுமதிக்கப்பட்ட அளவாகும்.

ஆனால் நேப்பியர் பாலம் அருகில் உள்ள கூவம் ஆற்று நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக டிடிஎஸ் இருந்துள்ளது. இதனால் இந்த நீரில் உயிரினங்கள் வாழ முடியாத நிலையில், நிலத்தடி நீர் மாசுபடும் நிலை ஏற்படும். இந்த நிலைக்கு ஆர்.கே.நகரில் விடப்படும் கழிவுநீரும் ஒரு காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது: நாங்கள் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதிலிருந்து பிரியும் பேபி கால்வாய், அதனுடன் இணையும் கேப்டன் காட்டன் கால்வாய் என 4 புறமும் கால்வாய்களால் சூழப்பட்டிருக்கிறோம்.

இந்த கால்வாய்கள் அனைத்திலும் கழிவுநீர்தான் ஓடுகிறது. இதற்கு சென்னை குடிநீர் வாரியம் விடும் கழிவுநீர்தான் காரணம். பல நேரங்களில் இந்த கால்வாயில் எருமை மாடுகள் நடந்து சென்றாலே, பல மணி நேரம் துர்நாற்றம் வீசும். எங்கள் பகுதியை ஒட்டிதான் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கும் உள்ளது.

ஒவ்வொரு நாளும் அவஸ்தையுடன் வாழ்ந்து வருகிறோம். இவற்றிலிருந்து உருவாகும் கொசுக்களாலும் ஈக்களாலும் அவதிப்பட்டு வருகிறோம். எங்கள் பகுதி பெயருக்கு தான் எழில் நகர். உண்மையில் இது எழில் இழந்த நகராக உள்ளது. இதற்கு அரசு உரிய தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். கொருக்குப்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த மகளிர் கூறும்போது, "இப்பகுதி முழுவதும் எப்போதும் கழிவுநீர் துர்நாற்றம் வீசுகிறது.

கொசுக்கள் தொல்லை இங்கு தீராத பிரச்சினையாக உள்ளது. இரவில் கொசு விரட்டிகளோ, கொசு வலைகளோ இல்லாமல் தூங்கவே முடியாது. இரவில் குழந்தைகளுக்கு பால் ஆற்றினால் கூட அதில் கொசுக்கள் விழுந்துவிடுகின்றன. கடும் வெயிலாக இருந்தாலும் குழந்தைகளுக்கு முழுக்கை சட்டை அணிவிக்க வேண்டியுள்ளது" என்றனர்.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களுக்கு உட்பட்டபகுதிகளில் சேகரமாகும் கழிவுநீர் கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த கழிவுநீர் குழாய் கட்டமைப்பு பழையது என்பதால் சேதமடைந்துவிட்டன. அதனால் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கழிவுநீரை கொண்டு செல்லும் பணி சில ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல ரூ.84 கோடியே 75 லட்சத்தில் புதிய திட்டம் ஒன்றை தற்போது தயாரித்திருக்கிறோம்.

96 மில்லியன் லிட்டர் கழிவுநீர்: தற்போது, மேற்கூறிய பகுதிகளில் சுமார் 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உருவாகிறது. இருப்பினும் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு தினமும் 96 மில்லியன் லிட்டர் கழிவுநீரை கையாளும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி தண்டையார்பேட்டை இளைய தெரு பகுதியில் இருந்து, கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை 6.8 கிமீ நீளத்துக்கு 1000 மிமீ விட்டம் கொண்ட ராட்சத கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இத்திட்டத்துக்காக ரயில்வே, இந்தியன் ஆயில் நிறுவனம், பக்கிங்ஹாம் கால்வாயில் சுமார் 45 மீட்டர் நீளத்துக்கு குழாய் பதிக்க வேண்டி இருப்பதால் நீர்வள ஆதாரத்துறை ஆகியவற்றிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

பக்கிங்ஹாம் கால்வாய் அருகில் 8 மீட்டர் விட்டம் கொண்ட இரு கிணறுகளும் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டப் பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்கப்படும். இதன்மூலம் சுமார் 7 லட்சத்து 38 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். மத்திய அரசு நிறுவனங்களிடம் அனுமதி பெறுவது, பலமுறை டெண்டர் கோரியும் எந்த ஒப்பந்ததாரரும் பணியை ஏற்க வராதது போன்ற காரணங்களால் சற்று தாமதம் ஏற்பட்டுவிட்டது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x