Published : 10 Jul 2023 10:06 AM
Last Updated : 10 Jul 2023 10:06 AM
திருப்பத்தூர்: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, புதிய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம் செயல்பாடின்றி போனது. அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்படும் என அப்போதைய நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
ஆனால், அதற்கான எந்த முயற்சியும் எடுக்காததால் பழைய பேருந்து நிலையம் குப்பை கழிவுகள் கொட்டும் இடமாகவும், இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்கள் நிகழும் இடமாகவும் மாறிவிட்டது. பேருந்து நிலையம் முழுவதும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதால் பழைய பேருந்து நிலையத்தின் அடையாளமே தெரியாத நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு பழைய பேருந்து நிலையம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. பழைய பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் வர்த்தக நிறுவனங்கள், காய்கறி மார்க்கெட், உணவகங்கள், அம்மா உணவகம் உட்பட சில வீடுகளும் உள்ளன.
பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இந்த இடத்தில் இரவு 7 மணிக்கு பிறகு ஆட்கள் நடமாட்டம் குறைந்து விடுகிறது. பழைய பேருந்து நிலையத்தை சுற்றிலும் உள்ள மின் விளக்குகளும் எரிவதில்லை. இதனால் இருள் சூழ்ந்த இந்த பகுதியில் பல சமூக விரோத குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிக அளவில் நடக்கிறது. மக்கள் நடந்து செல்லும் பாதையிலேயே பலர் அமர்ந்து மது அருந்து கின்றனர். மூன்றாம் பாலினத்தினர் இங்கு அதிக அளவில் கூடுகின்றனர். இரவு நேரங்களில் அவ்வழியாக செல்பவர்களை மிரட்டி பணம், கை கடிகாரம், கைபேசி ஆகியவற்றை அபகரிக்கும் செயல்களும் பெருகிவிட்டன.
மொத்தத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாகவே பழைய பேருந்து நிலையம் மாறிவிட்டது. திருப்பத்தூர் நகர காவல் துறையினர் இரவு நேரங்களில் இங்கு ரோந்துப்பணிக்கு வருவது இல்லை. க்ஷபுதிய பேருந்து நிலையத்தில் மட்டுமே பெயரளவுக்கு ரோந்துக்கு வந்து செல்கின்றனர். இதனால், பழைய பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இங்குள்ள கழிவறைகளை நகராட்சி நிர்வாகம் பூட்டியதால், திறந்தவெளி கழிப்பிடமாக மாறிவிட்டது. இதனால் பழைய பேருந்து நிலையம் சுற்றிலும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் புனரமைக்க முன்வர வேண்டும். இந்த இடத்தை வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையமாக மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், புதிய பேருந்து நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததால் திருப்பத்தூரை ஒட்டியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கும், மலை கிராமங்களுக்கும் செல்லும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் புதிய பேருந்து நிலையத்தில் போதுமான இடவசதி கிடைக்கும்.
முக்கிய நாட்கள், பண்டிகை நாட்கள், விசேஷ நாட்களில் மக்கள் கூட்டம் புதிய பேருந்து நிலையத்தில் அதிகமாக கூடுவதால் இட நெருக்கடி ஏற்பட்டு பேருந்துகள் எளிதாக வந்து செல்ல இட வசதி இல்லாமல் உள்ளது. இதை சரி செய்ய பழைய பேருந்து நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ பழையபேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அவ்வப்போது அகற்றி வருகிறோம். இதை புனரமைக்க போதுமான நிதி ஆதாரம் தற்போது இல்லை. இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, பழைய பேருந்து நிலையத்தை மீட்டெடுக்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.
இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினரிடம் கேட்டபோது, ‘திருப்பத்தூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் தினசரி ரோந்துப் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சமூக விரோத குற்றச்செயல்கள் நடப்பதாக யாரும் இதுவரை புகார் தெரிவிக்க இல்லை. பழைய பேருந்து நிலையத்தில் குற்றச் செயல்கள் நடந்தால் காவல் துறை வேடிக்கை பார்க்காது. சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT