Published : 10 Jul 2023 06:00 AM
Last Updated : 10 Jul 2023 06:00 AM
சென்னை: தமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஊரக வளர்ச்சி ஆணையராக இருந்த தாரேஸ் அகமது, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சமூகப் பாதுகாப்பு திட்ட ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.
சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆணையர் என்.வெங்கடாசலம், நிலச் சீர்திருத்த ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நில வரித்திட்ட அலுவல் சாரா இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கழக மேலாண் இயக்குநர் ஏ.சிவஞானம், பொதுத் துறை கூடுதல் செயலராகவும், பொதுத் துறை சிறப்புச் செயலர் வி.கலையரசி, வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராகவும், அறிவியல் மையத் தலைவர் ஏ.சுகந்தி, உள்துறை சிறப்புச் செயலராகவும், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் ஜெ.யு.சந்திரகலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராகவும், இப்பதவியில் இருந்த வி.அமுதவல்லி, சமூக நலத் துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், சமூக நலத் துறை ஆணையராக ஜெ.ஜெயகாந்தனை நியமித்து வெளியிடப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சென்னை ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் சி.உமாசங்கர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநராகவும், விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பிய மகேஸ்வரி ரவிக்குமார், நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் செயலராகவும், சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், நகராட்சி நிர்வாக துணை இயக்குநராகவும், புவியியல் மற்றும் சுரங்கத் துறை முன்னாள் ஆணையர் ஜெ.ஜெயகாந்தன், ஊரக வளர்ச்சித் துறை சிறப்புச் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாழ்ந்து காட்டுவோம் திட்ட தலைமை அதிகாரி ஜெ.இ.பத்மஜா, பொதுத் துறை துணைச் செயலராகவும், உள்துறை கூடுதல் செயலர் ஆர்.கஜலட்சுமி, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குநராகவும், உயர்கல்வித் துறை கூடுதல் செயலர் எஸ்.பழனிசாமி, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கழக மேலாண் இயக்குநராகவும், நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் இயக்குநர் ஆர்.லலிதா, சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதிப்பிரிவு கூடுதல் ஆணையராகவும், திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் சி.ஏ.ரிஷப், திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியராகவும், தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, திருவள்ளூர் கூடுதல் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகனை, சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதிப் பிரிவு கூடுதல் ஆணையராக மாற்றி வெளியிடப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT