Published : 10 Jul 2023 06:15 AM
Last Updated : 10 Jul 2023 06:15 AM
சென்னை: மூலதனம் இல்லாததால் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக அகவிலைப்படி (டி.ஏ) உயர்வு வழங்க இயலவில்லை என்று ஓய்வூதிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஓய்வூதிய நிதி பொறுப்பாட்சி’ என்ற அறக்கட்டளையில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், ஓய்வூதியம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் அனுப்பிய கோரிக்கை மனுவை பிரதமர் அலுவலகம், இந்த அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அறக்கட்டளை அனுப்பிய பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 2015 நவம்பர் மாதம் முதல் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க ஓய்வூதிய நிதி அறக்கட்டளையில் போதிய மூலதனம் இல்லை. இதனால், அகவிலைப்படி உயர்வு வழங்க இயலாத நிலை உள்ளது. தற்போது போக்குவரத்து கழகங்களுக்கு ஒதுக்கப்பட்ட டீசல் மானியம், மாணவர் பயணக் கட்டண மானியத் தொகையில் இருந்துதான் ஓய்வூதியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மேலும், அகவிலைப்படி உயர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
போதிய நிதி ஆதாரம் இல்லாததால், மருத்துவப் படியை உயர்த்தி வழங்க இயலவில்லை. குறைந்தபட்சம் ரூ.7,850 ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அரசிடம் இருந்து ஆணை பெறப்படவில்லை. மருத்துவ காப்பீட்டை அமல்படுத்த ஒரு ஓய்வூதியருக்கு ரூ.5,472 வீதம் ரூ.52.28 கோடி முன்பணம் செலுத்த என்எச்ஐஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. போதிய நிதி இல்லாததால் முன்பணம் செலுத்த முடியவில்லை.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், குடும்ப பாதுகாப்பு நிதி வழங்குதல் ஆகியவை அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. ஓய்வூதிய பணப் பலன்களை வழங்கும் பொறுப்பு, போக்குவரத்து கழகங்களை சார்ந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT