Published : 10 Jul 2023 06:06 AM
Last Updated : 10 Jul 2023 06:06 AM

எதிர்க்கட்சிகள் இணைவதால் எரிச்சலடையும் பிரதமர் மோடி: ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கவலை இல்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதைப் பார்த்து பிரதமர் மோடி எரிச்சல் அடைகிறார். இதனால், ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும், கவலைப்பட வேண்டியதில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்கும் முன், தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளைத் தந்தோமோ, அவற்றை நிறைவேற்றி வருகிறோம்.

பசியோடு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், மாணவ, மாணவிகளுக்காக காலை உணவு வழங்கும் திட்டம், பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டம், பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரால் தொடங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. தமிழகத்தில் ஒரு கோடி மகளிர் உரிமைத்தொகையைப் பெற உள்ளனர். இதனால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம், பொறாமை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு பேராபத்து: தற்போது இந்தியாவுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பாஜக ஆட்சி 2014-ம் ஆண்டு பொறுப்பேற்கும் முன், தேர்தலின்போது அறிவித்த உறுதிமொழிகளில் ஏதாவது ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதா?

ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு, ஒரு நபருக்கு ரூ.15 லட்சம் வழங்குவேன் என்று பிரதமர் மோடி உறுதிமொழி தந்தார். ரூ.15 லட்சம் வேண்டாம், ரூ.15 ஆயிரமாவது அல்லது ரூ.15-ஆவது வழங்கியுள்ளாரா? இதுவரை அதைப் பற்றிச் சிந்திக்கவோ, கேட்கவோ, பேசவோ இல்லை.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம் என்று உறுதிமொழி தந்தனர். இதுபோன்ற உறுதிமொழிகள் எல்லாம் காற்றில் பறந்துவிட்டன.

விவசாயிகள் நலனைப் பாதுகாப்போம் என்று கூறினார்கள். ஆனால், டெல்லியில் விவசாயிகள் ஒன்றுகூடி, மிகப் பெரிய போராட்டத்தை ஆண்டுக்கணக்கில் நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த கொடுமையும் நேரிட்டது.

எதிர்க்கட்சிகள் கூட்டம்: இதை எல்லாம் உணர்ந்து, மோசமான, சர்வாதிகார ஆட்சியை அப்புறப்படுத்தவே, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, நல்ல முடிவை எடுத்துள்ளன. அதற்காகத்தான், அண்மையில் பிஹார் மாநிலம் பாட்னாவில், எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்தே இந்தக் கூட்டம் நடைபெற்றது. அதேபோல, வரும் 17, 18-ம் தேதிகளில் பெங்களூருவில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைப் பார்த்து எரிச்சலடையும் பிரதமர் மோடி, ஏதேதோ பேசுகிறார்.

இதனால் எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும், ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. கொள்கை, லட்சியம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து, மக்களவைத் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெறுவதற்கான முயற்சிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று களத்தில் இறங்கி இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x