Published : 10 Jul 2023 06:31 AM
Last Updated : 10 Jul 2023 06:31 AM
ஆவடி உழவர் சந்தையில் தோட்டக்கலைத் துறை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை நேற்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் அதிக வெப்பம் மற்றும் பருவம் தவறிய மழை காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆகவே, தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், தோட்டக்கலைத் துறை மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் போன்ற மாவட்ட விவசாயிகளிடமிருந்து விளைவிக்கப்படும் தக்காளிகளை நேரடியாக கொள்முதல் செய்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் படிப்படியாக குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யும் நடவடிக்கையில் கடந்த சில நாட்களாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அதன் விளைவாக, முதல் கட்டமாக ஆவடி உழவர் சந்தையில், தோட்டக்கலைத் துறை மூலம் தக்காளி விற்பனை நேற்று தொடங்கியது. நேற்று வெளி சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, திருவள்ளூர் உழவர் சந்தையிலும் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படவுள்ளது. ஆகவே, உழவர் சந்தைகளில் தோட்டக்கலைத் துறை மூலம் விற்பனை செய்யும் தக்காளிகளை வாங்கி பயனடையுமாறு தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெபக்குமாரி அனி தெரிவித்துள்ளார்.
வெளி சந்தைகளில் 1 கிலோ தக்காளி ரூ.110 வரை விற்கப்பட்டது. உழவர் சந்தையில் ரூ.95-க்கு விற்பனையானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT