Last Updated : 22 Jul, 2014 10:16 AM

 

Published : 22 Jul 2014 10:16 AM
Last Updated : 22 Jul 2014 10:16 AM

நவீனமயமாக்கல் திட்டத்தால் சிரமப்படும் தபால் துறை ஊழியர்கள்: மென்பொருட்கள் கோளாறு செய்வதாக புகார்

தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டத்தின்படி அஞ்சலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மென்பொருட்கள் மெதுவாக இயங்குவதால் தபால்துறை ஊழியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

இந்திய தபால் துறையை தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நவீனம யமாக்கும் திட்டத்துக்கு பொருளாதார விவகாரத்துறை கடந்த 2010-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அனைத்து தபால் நிலையங்களிலும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை களை பரவலாக்க தகவல் தொழில் நுட்ப நவீனமயமாக்கல் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இதற்காக கடந்த 2012-ம் ஆண்டு 1877.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பெரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற் காக தகவல் தொழில்நுட்பத்துறை ஜாம்பவான்களான இன்போஸிஸ், டிசிஎஸ், சிஃபி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. தபால் நிலையங்களில் வழங்கப்படும் அஞ்சல் காப்பீட்டு திட்டம், அஞ்சலக சேமிப்பு திட்டம், ஸ்பீட் போஸ்ட், கோர் பேங்கிங், உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ள இந் நிறுவனங்கள் நவீன மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் சேவைகளை அளித்து வருகின்றன.

ஊழியர்களுக்கு பயிற்சி

இந்த மென்பொருட்களை பயன் படுத்த அஞ்சலக ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டது. ஆனால் முறையான பயிற்சியை பெற்ற போதும் இந்த மென்பொருட்களை இயக்குவதில் பெரும் சிக்கல் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக இந்திய அஞ்சல் துறையில் அஞ்சல் உதவியாளராக பணி புரிந்து வரும் ஊழியர் ஒருவர் கூறும் போது, "நான் பிளஸ் 2 படித்துவிட்டு தேர்வின் மூலம் அஞ்சல் உதவியாளர் பதவிக்கு வந்தேன். இதுவரை சாதாரண முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த அஞ்சலக பணிகளை தற்போது மென் பொருட்களின் உதவியுடன் செய்ய வேண்டி உள்ளது. நான் பணிபுரியும் தலைமை தபால் நிலையத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான சேமிப்பு கணக்குகள் உள்ளன. இவற்றின் தகவல் களை எல்லாம் இந்த மென்பொரு ளுக்குள் கொண்டு வர பல மணி நேரம் ஆகிறது" என்றார்.

இது தொடர்பாக தேசிய அஞ்சல்துறை ஊழியர்கள் கூட்டமைப்பின் தமிழக செயலாளர் ஜெயராமன் கூறும்போது, "இந்த பிரச்சினை உண்மைதான். புதிதாக ஒருவர் கணக்கு தொடங்க வரும்போது அவரது கணக்கை இந்த மென்பொருளில் பதிவு செய்ய நீண்ட நேரம் ஆகிறது. இதனால் பொதுமக்கள் ஊழியர்களை கடிந்து கொள்கிறார்கள். வேலையை எளிதாக்க அறிமுகப்படுத்தப்பட்ட ஐடி நவீனமயமாக்கல் திட்டம் தற்போது வேலையை கடினமாக்கியுள்ளது. எனவே நல்லமுறையில் வேகமாக செயலாற்றும் மென்பொருட்களை எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக சென்னை மண்டல தபால் துறை அதிகாரி மெர்வின் அலெக்ஸாண்டரிடம் கேட்ட போது, "தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்க லால் பிரச்சினைகள் எதுவும் இல்லை. கிராமப்புற பகுதிகள் போன்ற சில இடங்களில் மட்டுமே இந்த மென்பொருட் களை இயக்குவதில் சிக்கல் உள்ளது. தமிழக தபால் துறையில் தற்போது இந்த பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது. விரைவில் இப்பிரச்சினை முழுதுமாக தீர்க்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x