Published : 10 Jul 2023 01:38 PM
Last Updated : 10 Jul 2023 01:38 PM
சிவகங்கை: தமிழகத்தில் முதன்முறையாக சிவகங்கை மாவட்டம், முனைவென்றி, சாலைக்கிராமம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவித்த தாய்மார்களுக்கு பிரேம் செய்யப்பட்ட நினைவு புகைப்படங்களை வழங்கி மருத்துவர்கள் பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.
கிராமப்புற, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், அங்கு நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் குழந்தை பிரசவித்த தாய்மார்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக, தமிழகத்திலேயே முதன்முறையாக சிவகங்கை மாவட்டம் முனைவென்றி, சாலைக் கிராமம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவமாகி நலமுடன் செல்லும் தாய்மார்களையும், குழந்தைகளையும் புகைப்படம் எடுத்து பிரேம் செய்து வழங்குகின்றனர்.
ஒவ்வொரு பிரேமுக்கும் ரூ.600 முதல் ரூ.800 வரை செலவானாலும், சுகாதார நிலையங்கள் சார்பில் இலவசமாகவே கொடுக்கின்றனர். மேலும் புகைப்படம் பாய்ன்டில் வைக்கப்பட்ட போர்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்த்து வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அவையும் புகைப்படங்களில் இடம் பெறுகின்றன.
இது குறித்து சிவகங்கை சுகாதார துணை இயக்குநர் விஜய் சந்திரன் கூறியதாவது: சில தனியார் மருத்துவ மனைகளில் தாய்மார்களுக்கு நினைவுப் புகைப் படங்கள் வழங்கும் வழக்கம் உள்ளது. அதேபோன்று, மாவட்டத்தில் முதற்கட்டமாக 2 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தி உள்ளோம்.
இதற்கான செலவை, சுகாதார நிலையங்களுக்கு ஒதுக்கப்படும் இதர நிதியில் இருந்து செய்கிறோம். இது தாய்மார்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள 52 சுகாதார நிலையங்களிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம்’’. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT