Published : 09 Jul 2023 11:52 PM
Last Updated : 09 Jul 2023 11:52 PM
தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான் தமிழகத்திலேயே அதிக பிரசவங்கள் நடப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) மாலை 10-வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை வகித்தார். மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் அமுதவல்லி வரவேற்றார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளநிலை மருத்துவம் முடித்த 101 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஹூமோபிலியா மற்றும் ஹூமோகுளோபினோபதி பராமரிப்புக் கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும், ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் அமைச்சர் பேசியது.
தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மலை கிராமங்கள் அதிகம் உள்ள சுற்று வட்டார மாவட்டங்களில் ஹூமோபிலியா பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஹூமோபிலியா மற்றும் ஹூமோகுளோபினோபதி பராமரிப்புக்கென தற்போது திறக்கப்பட்டுள்ள மையம், தமிழகத்திலேயே அரசு மருத்துவமனைகளில் முதல் மையம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான் ஆண்டுதோறும் அதிக அளவிலான பிரசவங்கள் நடக்கிறது. தருமபுரி மற்றும் சுற்று வட்டார மாவட்ட மக்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அரசு மருத்துவக் கல்லூரியின் சிறப்பான நிர்வாகமும் தான் இதற்கு காரணம்.
இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களிலும் புதிய கல்லூரிகளை நிறுவ மத்திய அரசிடம் தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
தருமபுரி மாவட்ட மக்களுக்கு மேம்பட்ட மருத்துவ சேவைகள் கிடைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. மேலும் எதுபோன்ற வசதிகள் இங்கே தேவை என்பதையும் அறிந்து படிப்படியாக செய்து தர தயாராக உள்ளோம் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தருமபுரி எம் எல் ஏ வெங்கடேஷ்வரன், தருமபுரி நகராட்சி தலைவர் லட்சுமி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம் எல் ஏ தடங்கம் சுப்பிரமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் ஜெயந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழா முடிவில், மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் மருத்துவர் சாந்தி நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT