Published : 09 Jul 2023 09:42 PM
Last Updated : 09 Jul 2023 09:42 PM
மதுரை: கடந்த சில ஆண்டிற்கு முன் வரை, ‘டேக்வாண்டோ’ தற்காப்பு கலை சென்னையை தாண்டி மற்ற மாவட்ட மக்களுக்கு பரிச்சயம் இல்லை. சமீப காலமாக கராத்தே விளையாட்டைப் போல் டேக்குவாண்டோ என்ற இந்த கொரிய தற்காப்பு கலையும் பிரபலமாகி வருகிறது.
ஓலிம்பிக்கில் இடம்பெற்று உள்ள இந்த விளையாட்டுக்கு கல்லூரிகள், வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆனாலும், இந்த தற்காப்பு கலை படித்தவர்கள் சொற்பமானவர்களே என்பதோடு அவர்களுக்கான பயிற்சியாளர்களும் சென்னை போன்ற பெரு நகரங்களை தாண்டி வெளியே வராததால் இந்த ‘டேக்வாண்டோ’ தற்காப்பு கலை விளையாட்டில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அளவிற்கு தமிழக வீரர்கள் உருவாக முடியவில்லை. இந்த குறையை போக்க மதுரையை சேர்ந்த நாராயணன், மதுரையில் 1,000-க்கும் மேற்பட்ட ‘டேக்வாண்டோ’ வீரர்களை உருவாக்கி உள்ளார்.
அதோடு நிற்காமல், இந்த விளையாட்டை பிரபலப்படுத்த, பல்வேறு பிரிவுகளில் 29 ‘கின்னஸ்’ சாதனைப் படைத்துள்ளார். இந்த கலையில் இவரைப்போல் இதுவரை யாரும் ‘கின்னஸ்’ சாதனை படைக்கவில்லை. இந்த சாதனையை பாராட்டி கடந்த வாரம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அழைத்து பாராட்டியதால் மகிழ்ச்சியில் திளைத்துபோய் உள்ளார் நாராயணன்.
அவர் கூறுகையில், ‘‘டேக்வாண்டோ கொரியன் தற்காப்பு கலை. இன்னும் பலர், இந்த விளையாட்டை கராத்தே கராத்தே என்றுதான் சொல்கிறார்கள். இந்த விளையாட்டை கொரிய மொழியில் Tae என்பது உதை எனவும் Kwon என்பது கைகாளால் தாக்குதல் எனவும் Do என்பது கலை எனவும் பொருள்படும். அதாவது கால், கை இவற்றால் எதிரியைத் தாக்கிச் செயலிழக்கச் செய்யும் கலை என்று சொல்கிறார்கள். கராத்தே போன்று இந்த கலைக்கும் அடிப்படை ஒன்றுதான். ஆனால், கால்களை அதிகம் பயன்படுத்தும் விளையாட்டாக டேக்வாண்டோ உள்ளது. ஒரு தற்காப்பு கலையாக மட்டும் கற்றுக் கொள்ளாமல் படிப்பதற்கும், வேலைவாய்ப்புகளுக்கும் இந்த விளையாட்டு பயனுள்ளதாக இருக்கிறது. திறமைகளை மேம்படுத்தவும் உதவுகிறது.
ஒரு நிமிடத்தில் அதிக பஞ்ச், 3 நிமிடத்தில் அதிக பஞ்ச், ஒரு நிமிடத்தில் 38 கான்கிரீட் செங்கலை உடைப்பது,
ஜம்பிங் பேக் ஹிக் முறையில் கான்கிரீட் செங்கலை உடைப்பது, கீழும் மேலுமாக ஆணி படுக்கையில் நான் படித்துக் கொண்டு மேலே ஒரு நிமிடத்தில் 32 கான்கிரீட் சுத்தியலை உடைப்பது, ஒரு நிமிடத்தில் 4 கிலோவுக்கு மேலான 23 தர்பூசணி பழங்களை உடைத்தது போன்ற பல பிரிவுகளில் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளேன். இந்த விளையாட்டை திட்டமிட்டு கற்றுக் கொள்ளவில்லை. சென்னையில் கல்லூரி சேர்ந்தபோது தந்தை மறைவினால் மன அழுத்தத்தில் தவித்தேன். நான் தங்கியிருந்த இடத்தின் பக்கத்தில் நடந்த டேக்வாண்டோ பயிற்சி வகுப்புக்கு சென்றேன். இந்த பயிற்சியில் பங்கேற்க ஆரம்பித்ததும், மன அழுத்தத்தில் இருந்தும் மீண்டேன். இந்த விளையாட்டு மீது தனி ஈடுபாடும் ஏற்பட ஆரம்பித்தது. இப்படி யதார்த்தமாக இந்த கலையை கற்க போய் சேர்ந்தேன்.
உடலையும் சிறப்பாக பராமரிக்க முடிந்தது. 4 மாதத்தில் நன்றாக கற்றுக் கொண்டேன். படித்துக் கொண்டே மற்றவர்களுக்கு நானும் சென்னையில் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். கல்லூரி படிப்பு முடிந்ததும் மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். ஆனாலும், டேக்வாண்டோ போட்டியில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஈடுபாடு அதிகரிக்கவே, இந்த கலையை தொடர்ந்து கற்கவும், நான் கற்றதை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்க நான் பார்த்து வந்த ஐடி வேலையை விட்டேன். மதுரைக்கு வந்து, தற்போது வரை டேக்குவாண்டோ கலையை மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன். படிக்கிற காலத்தில் டேக்குவாண்டோ தேசிய போட்டிகள் வரை சென்று பங்கேற்றுள்ளேன். நான் சாதிக்க முடியாததை என் மாணவர்கள் மூலம் சாதிக்க நினைக்கிறேன்.
இதுவரை, எனக்கு கீழ் மதுரையில் 1,000 டேக்வாண்டோ வீரர்களை உருவாக்கியுள்ளேன். என்னிடம் படித்த மாணவர்களே பலர், தற்போது இந்த கலையின் பயிற்சியாளராக உள்ளனர். இரவு பணி பார்க்கும் ஐடி பணியாளர்களுக்கு டேக்வாண்டோ போன்ற தற்காப்பு கலையின் அவசியம் புரிய ஆரம்பித்திருக்கிறது. அதனால், கல்லூரி மாணவர்களை தாண்டி தற்போது ஐடி நிறுவன பணியாளர்களும் என்னுடைய மாணவர்களாக உள்ளனர், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT