Last Updated : 09 Jul, 2023 04:53 PM

 

Published : 09 Jul 2023 04:53 PM
Last Updated : 09 Jul 2023 04:53 PM

கோவையில் குளங்களை சூழ்ந்த ‘பச்சை பசேல்’ ஆபத்து - ஆகாயத்தாமரை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்?

கோவை: கோவை மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்தாலும், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 9 நீர்நிலைகளே உள்ளன. இவை நொய்யல் ஆற்றை நீராதாரமாக கொண்டுள்ளன. மாநகரில் நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கு இக்குளங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மாநகரிலுள்ள மழைநீர் வடிகால்கள், இக்குளங்களில் வந்து கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குளங்கள், பராமரிப்பின்றி தற்போது மாசடைந்து காணப்படுகின்றன.

இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் பி.ராஜ்குமார் கூறியதாவது: கோவை மாநகரில் உள்ள வாலாங்குளம், குறிச்சிகுளம், பெரியகுளம் உள்ளிட்ட குளங்களின் கரைப்பகுதிகளில் மாநகராட்சி சார்பில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குளக்கரைகள் பலப்படுத்தப்பட்டு பல்வேறு பொழுதுபோக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது வரவேற்கத்தக்கது. அதேசமயம், குளத்துக்குள் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குளங்களை சுற்றியுள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், மழைநீரும் நேரடியாக குளங்களில் கலக்கிறது. கழிவுநீர் கலப்பதால் குளங்களில் ஆகாயத்தாமரை படர்ந்து, நீர்நிலைகள் மாசடைகின்றன.

ஆகாயத்தாமரையை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் முழு பலனளிக்கவில்லை. அவ்வப்போது பெயரளவில் மட்டும் ஆகாயத்தாமரை அகற்றப்படுகிறது. மாநகரில் ஒருங்கிணைக்கப்பட்ட 60 வார்டுகளின் சில பகுதிகளில் மட்டுமே பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் உள்ள அனைத்து வகை கட்டிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக சுத்திகரிப்பு நிலையத்துக்கு சென்று, சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

உக்கடத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் முழு பயன்பாட்டில் இல்லை. பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகளை விரைவாக முடித்து, கழிவுநீர் குளத்துக்குள் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும். தவிர, கழிவுநீர் கலப்பை தடுக்க, குளங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய சுத்திகரிப்பு நிலைய பணிகள்: இது குறித்து மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறியதாவது: மாநகரில் உள்ள குளங்களில் நீர்நிலையை பாதுகாக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குளத்துக்கு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, குளத்துக்குள் விடப்படுகிறது. வாலாங்குளம் மற்றும் பெரியகுளத்தின் கரைப்பகுதிகளில் தலா 2 எம்.எல்.டி. சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளன.

வாலாங்குளத்தில் கூடுதலாக ஒரு சுத்திகரிப்பு நிலையம், கிருஷ்ணாம்பதி குளம், சிங்காநல்லூர் குளம் ஆகியவற்றில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தவிர, முத்தண்ணன் குளத்தின் கரையிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயாலஜிக்கல் மற்றும் கெமிக்கல் ஆக்சிஜன் டிமாண்ட் என இரு வகைகளில் நீரின் தரம் ஆய்வு செய்யப்படுகிறது.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்ட குளங்களில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முன்னர் நீரின் தன்மை எவ்வாறு இருந்தது, அதன்பின் சுத்திகரிப்பு செய்த தண்ணீர் வந்த பின்னர் எவ்வாறு உள்ளது என்பன குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்ட குளங்களில் நீர் மாசுபாடும், பாக்டீரியாக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன.

மற்றொரு புறம் எந்தெந்த ஏரியாக்களில் பாதாள சாக்கடைத் திட்டக் குழாய் உள்ளது, அதில் எவ்வளவு வீடுகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை கணக்கெடுத்து வருகிறோம். அதனடிப் படையில் குளத்துக்குள் கழிவுநீர் கலக்கும் வகையிலான குழாய்களை கண்டறிந்து துண்டித்து வருகிறோம், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x