Published : 09 Jul 2023 03:55 PM
Last Updated : 09 Jul 2023 03:55 PM

தாம்பரத்தில் ஓரிடத்தில் நிற்காத பேருந்துகள்: ஓடி ஓடி களைப்பாகும் பயணிகள்

தாம்பரம்: தாம்பரத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் மாநகரபேருந்துகள் ஒரே இடத்தில் நிற்கமால் பல்வேறு இடங்களில் நிற்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து இந்து தமிழ்நாளிதழின் உங்கள் குரல் பகுதியில் தாம்பரத்தை சேர்ந்த லதா மகேஸ்வரி கூறியதாவது: தாம்பரத்தில் இருந்து சென்னை, புறநகர் மற்றும் கிராமங்களுக்கு நூற்றுக்கணக்கான மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் போதிய பேருந்து நிறுத்தங்கள் இல்லாததால் ஒரு குறிப்பிட்ட இடத்தில்மட்டும் நிற்காமல் பல்வேறு இடங்களில் பேருந்து நின்று செல்கிறது.

இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். பேருந்துகளைப் பிடிக்க மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. மேலும் மேற்கு தாம்பரத்தில் – கிழக்கு தாம்பரம் வழியாக செல்லும் 99, 51 ஆகிய தடம் எண் கொண்ட மாநகர பேருந்து ரயில் நிலையம் உள்ள பகுதியில் வெவ்வேறு இடங்களில் நிற்கிறது. ஒரே இடத்தில் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது குறித்து சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தாம்பரத்தில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இருந்து இயக்குவதற்கு போதிய இட வசதி இல்லை.இதனால் பேருந்துகள் செல்லும் இடங்களை பொறுத்து தனித்தனியே நிறுத்தி வைத்து இயக்கப்படுகின்றன. மேலும் ரயில் நிலையபகுதிகளில் வெளியூர் பேருந்துகளும் செல்வதால் மாநகரப் பேருந்து நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை இதனால், பிரச்சினை தொடர்கிறது. பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.

காவல்துறை போக்குவரத்து துறை, வட்டாரப் போக்குவரத்து துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, ரயில்வே நிர்வாகம் ஆகியோர் இணைந்து கூட்டாக ஆய்வு செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். அவரவர் அவரவர் வேலையை மட்டும் செய்வதால் பிரச்சினை ஏற்படுகிறது. பல்வேறு துறைகளுக்கும் பொறுப்புள்ளதால் அனைவரும் ஒருங்கிணைந்து ஆய்வு செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாநகர போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தாம்பரத்தில் பேருந்து நிலையம் என்று ஒன்று இல்லை. பேருந்து நிறுத்தங்கள் தான் உள்ளன. பேருந்துகள் அனைத்தும் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மாநகரப் பேருந்து மட்டும் இன்றி வெளியூர் செல்லும் பேருந்துகளும் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

பேருந்து நிலையம் இருந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். தாம்பரத்தில் பேருந்து நிலையம் அமைக்க வாய்ப்பு இல்லை. அதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வழி இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x