Published : 09 Jul 2023 04:03 AM
Last Updated : 09 Jul 2023 04:03 AM
சென்னை: சுற்றுலா தலங்களுக்கு பாரம்பரிய நீராவி இன்ஜின் ரயில் இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
தெற்கு ரயில்வே சார்பில், பாரம்பரிய நீராவி இன்ஜின் சிறப்பு ரயில் என்ற சுற்றுலா ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயிலை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீராவி இன்ஜின் சுற்றுலா ரயில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். பாரம்பரியத்தை, புதிய தொழில்நுட்பத்தில் கொண்டுவரும் வகையில் நீராவி இன்ஜின் சுற்றுலா ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொன்மலை ரயில்வே பணிமனை, ஆவடி மின்சார ரயில் பணிமனை, பெரம்பூர் கேரேஜ் பணிமனை ஆகியவை இணைந்து இந்த ரயிலை தயாரித்துள்ளன. சோதனை அடிப்படையில் 3 மாதங்களுக்கு இந்த ரயில் இயக்கப்படும். பாதுகாப்புச் சான்றிதழ் பெற்ற பிறகு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். வர்த்தக ரீதியில் பாரம்பரிய நீராவி இன்ஜின் ரயிலை இயக்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
2014-ல் தமிழக ரயில்வேக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.870 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது அது 6,080 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
தெற்கு ரயில்வேயில் 90 நிலையங்களை மறுசீரமைக்கும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. புதிதாக வந்தே பாரத் ரயில்கள் வர உள்ளன. ஒவ்வொரு வாரமும் ஒரு வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. தென் மாநிலங்களுக்கு அதிக அளவில் வந்தே பாரத் ரயில்கள் கிடைக்கும். எல்லா மாநிலங்களையும் தொடர்பு கொள்ளும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வேண்டுமென்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார். அதன்படி, கடந்த மாத இறுதியில் அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. மேலும் பல வழித்தடங்களில் ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு அம்சங்கள்: நீராவி இன்ஜின் ரயிலில் மூன்று ஏசி எக்ஸிக்யூடிவ் சேர்கார் பெட்டி, ஒரு ஏசி உணவு தயாரிப்பு மற்றும் உணவகப் பெட்டி என 4 பெட்டிகள் உள்ளன. ஒரு பெட்டியில் 48 சொகுசு இருக்கைகள் இருக்கும். நொறுக்குத் தீனி சாப்பிடும் வசதி, செல்போன் சார்ஜிங் வசதிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 10 கண்ணாடிக் கதவுகள், 2 அவசரக் கதவுகள் இடம்பெற்றுள்ளன. நவீனக் கழிப்பறைகள், எல்இடி திரைப் பலகையில் சேரும் இடம் அறியும் வசதி உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இதுதவிர, ஏசி உணவகப் பெட்டியில் அமர்ந்து சாப்பிடும் வகையில் 28அமரும் இருக்கைகள் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT