Published : 09 Jul 2023 03:54 AM
Last Updated : 09 Jul 2023 03:54 AM
சென்னை: தமிழக பதிவுத் துறையில் ஆவணப் பதிவு, முத்திரைத் தீர்வை, பொது அதிகார ஆவணப் பதிவு உள்ளிட்டவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வணிக வரி மற்றும் பதிவுத் துறைச் செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பத்திரப் பதிவுத் துறை சேவைக் கட்டணங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படவில்லை. எனவே, ஆவணப் பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தைப் பாதுகாத்தல், மின்னணு வாயிலாக ஆவண நகல் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 20 இனங்களுக்கான கட்டணங்கள் மற்றும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரைக் கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.
ரசீது ஆவணப் பதிவுக் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.200-ஆகவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மென்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாகவும் மாற்றி அமைக் கப்பட்டுள்ளது.
அதிகபட்ச முத்திரைத் தீர்வை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரமாகவும், தனி மனை பதிவு கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.1,000-ஆகவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10,000 என்று உள்ளதை, சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் ஜூலை 10-ம் தேதி (நாளை) முதல் நடைமுறைக்கு வருகிறது.
பத்திர எழுத்தர் நல நிதியம்: தமிழ்நாடு பத்திர எழுத்தர் நல நிதியக் குழுவில் உறுப்பினர்கள் நியமிப்பது குறித்த கருத்துருவை பதிவுத் துறை தலைவர் அரசுக்கு அனுப்பியுள்ளார். அதைஏற்று, தமிழ்நாடு பத்திர எழுத்தர் நல நிதியக் குழுவில் எஸ்.பத்மநாபன் (திருப்பூர்), ஜி.கண்ணன் (மதுரை), ஆர்.முத்துக்குமார் (ராமநாதபுரம்), ஜி.சிவசங்கரராமன் (தூத்துக்குடி) ஆகிய பத்திர எழுத்தர் கள் உறுப்பினர்களாக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் பதிவுத் துறைச் செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT