Published : 09 Jul 2023 01:18 AM
Last Updated : 09 Jul 2023 01:18 AM
கோவை: காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் அளிப்பது குறித்து கோவையில் கூடுதல் டிஜிபி அருண் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
கோவை சரக காவல்துறை டிஐஜியாக பணியாற்றி வந்த சி.விஜயகுமார் நேற்றுமுன்தினம் (7-ம் தேதி) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் டிஜிபி அருண் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், கூடுதல் டிஜிபி அருண் தலைமையில், மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில், உயரதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று (8-ம் தேதி) நடந்தது.
இதில் காவல் ஆணையர்கள் வே.பாலகிருஷ்ணன் (கோவை), பிரவீன் குமார் அபிநபு (திருப்பூர்), மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகர், காவல் கண்காணிப்பாளர்கள் பத்ரி நாராயணன் (கோவை), சாமிநாதன் (திருப்பூர்), பிரபாகர் (நீலகிரி), ஜவஹர்(ஈரோடு), துணை ஆணையர்கள் சந்தீஷ், சண்முகம், மதிவாணன், சுகாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கோவை, திருப்பூர் மாநகரங்கள், கோவை சரக காவல்துறைக்கு உட்பட்ட காவல் மாவட்டங்கள் ஆகியவற்றில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், களத்தில் காவல்துறையினரின் செயல்பாடுகள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன. சில மணி நேரத்துக்கு பின்னர் இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக மாநகர காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: காவல்துறையில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் நலவாழ்வுக்காக யோகா, மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், காவல்துறை உயரதிகாரிகளுக்கு அதுபோன்ற பயிற்சிகள் எதுவும் அளிக்கப்படுவதில்லை. எனவே, காவலர்களைப் போல் காவல்துறை உயரதிகாரிகளுக்கும் யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி, மன அழுத்தங்களை குறைப்பதற்கான மருத்துவர்கள் மூலமாக ஆலோசனை (கவுன்சலிங்) உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்கப்படுகிறது. அதேபோல், மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வகையிலும் அனைத்து காவல்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கும் ஒருநாள் விடுமுறை அளிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இது தவிர, காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மனநிலையை அறிந்து கொள்ளும் வகையில் மனநல மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சில கேள்விகளை உருவாக்கி காவல்துறை அதிகாரிகளுக்கு அளித்து நிரப்பித் தர, அதாவது தேர்வு போல் நடத்தலாம். அப்படி செய்தால் அவர்களின் மனநிலை குறித்து நாம் அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
உடல் பாதிப்பு பிரச்சினைகள் என்றால் சுயமாக மருத்துவம் செய்து கொள்ளக்கூடாது. மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதேபோல், கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு கூடுதல் டிஜிபி அருண், காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT