Published : 09 Jul 2023 02:25 AM
Last Updated : 09 Jul 2023 02:25 AM
திருவிடைமருதூர்: கோயில்கள் மூலம் பெறப்படும் நிதி முழுமையாக அந்த கோயில்கள், பக்தர்கள் வசதிக்காகச் செலவிடப்பட வேண்டும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
திருவிடைமருதூர் வட்டம், கஞ்சனூரிலுள்ள கற்பகாம்பாள் சமேத அக்னீஸ்வரர் சுவாமி கோயில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும். இக்கோயில் நவக்கிரஹங்களில் ஒன்றான சுக்ர தலமாகப் போற்றப்படுகிறது.
இக்கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.6 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளக் கடந்த மாதம் பாலாலயம் நடைபெற்றது.
தற்போது, இக்கோயிலில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை மதுரை ஆதீன 293-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கிய பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியது, "கோயிலை சுற்றிலும் உள்ள 700 மீட்டர் நீளமுடைய மதில் சுவரைப் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது. மேலும் கோயிலில் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் தனித்தனியாக பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
மாசி மக உற்சவத்தின் போது தேரோடுவதற்காக இக்கோயிலுக்கு விரைவில் புதிய தேர்த் திருப்பணி தொடங்கப்பட உள்ளது. மேலும், இங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நடமாடும் சித்த மருத்துவ வைத்திய சாலையும், சுக்ர பகவானுக்கு வெள்ளி தேரும் வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், மாசி மக விழாவின் போது திருநாவுக்கரசரைப் போற்றும் விதமாக நலிந்த ஓதுவாருக்கு அப்பர் விருது மற்றும் பொற்கிழி வழங்கப்படும்.
இக்கோயிலில் 18 மாதங்களில் மகா கும்பாபிஷேகம் நடத்திடும் வகையில் திருப்பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கோயில்களை முறையாகப் பராமரிப்பது, திருப்பணி செய்வது, தூய்மையாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும். கோயில்கள் மூலம் பெறப்படும் நிதி முழுமையாக கோயில்களுக்கும், பக்தர்கள் வசதிக்காகச் செலவிடப்பட வேண்டும். தினமும் கோயில் வழிபாடு செய்வது மன அமைதியையும், மனத் தெளிவையும் தரும்.
திருப்புறம்பியும் சாட்சிநாத சுவாமி கோயிலில் இலுப்பை மரத்தாலான சுமார் 9 அடி அகலம் 11 அடி உயரம் உடைய தேர் வடிவமைக்கும் பணி ரூ.40 லட்சம் மதிப்பில் இந்த ஆதீனத்தின் சொந்த நிதியில் நடைபெறுகிறது. வரும் மாசி மக விழாவின் தேரோட்டம் நடத்திட முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து திருப்புறம்பியும் சாட்சிநாதர் சுவாமி கோயிலில் நடைபெறும் தேர் திருப்பணிகளையும் மதுரை ஆதீனம் பார்வையிட்டார். அவருடன் நிர்வாக பொறுப்பாளர் முத்தையன், கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில் கண்காணிப்பாளர் செங்குட்டுவன் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT