Published : 08 Jul 2023 09:11 PM
Last Updated : 08 Jul 2023 09:11 PM
மதுரை: கல்லூரிகளில் பொதுப்பாடத் திட்ட முறையை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் கல்லூரி பேராசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரிகளில் பொதுப் பாடத்திட்ட முறை அமல்படுத்துவதை திரும்பப் பெறக் கோரி கல்லூரி பேராசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் இன்று மதுரை பழங்காநத்தத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டுக்கென மாநிலக் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு 2023 செப்டம்பரில் வெளியிடப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் வலிந்து திணிக்கும் மாநிலம் முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம் என்ற பொதுப்பாடத் திட்டமானது தமிழ்நாடு உயர்கல்வித் தரத்தை சீரழிப்பதாக உள்ளது.
மேலும், தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த எடுக்கும் முயற்சியாகும். புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘மாதிரி பாடத் திட்டங்கள்’ ஏற்கெனவே உள்ள பாடத் திட்டங்களை விடத் தரம் குறைந்ததாகவும், சீரற்றதாகவும் உள்ளன. எனவே, தமிழகத்தின் உயர் கல்வியை பாதிக்கும் பொதுப்பாடத் திட்ட முறையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அரசு உதவிபெறும் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்படாமல் உள்ள இணைப் பேராசிரியர் பணி மேம்பாடு, நிலுவைத் தொகை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த உண்ணாவிரதத்துக்கு, மூட்டா அமைப்பு மண்டலத் தலைவர்கள் எஸ்.ரமேஷ்ராஜ், வி.பி.ஞானேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மூட்டா அமைப்பின் தலைவர் செந்தாமரைக்கண்ணன், மதுரை காமராசர் பல்கலைக் கழக அலுவலக சங்கத்தின் தலைவர் எஸ்.முத்தையா, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலர் பி.சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக கல்லூரி ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT