Published : 08 Jul 2023 04:04 PM
Last Updated : 08 Jul 2023 04:04 PM
மதுரை: மதுரை காவல் சரகத்துக்குட்பட்ட உயர் அதிகாரிகளுடன் தமிழக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உரிய காரணங்களோடு விடுமுறை விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் என்றும், அவ்வப்போது காவல் துறையினருக்கு மன அழுத்தம் போக்கும் வகையில் புத்துணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தமிழக காவல் துறை டிஜிபி சங்கர்ஜிவால் தலைமையில் மதுரை சரகத்துக்கு உட்பட்ட மதுரை மாநகர், மாவட்டம், விருதுநகர் மாவட்ட காவல் துறை உயரதிகாரிகளுடன் காவல் துறையினரின் மன அழுத்தம் போக்குவது குறித்தும், சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை கோவை சரக டிஐஜி விஜயகுமார் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தேனி மாவட்டத்துக்கு வருகை தந்த நிலையில், தமிழக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் மதுரையில் காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மதுரை மாநகர் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், டிஐஜி பொன்னி, மாவட்ட எஸ்பி சிவபிரசாத், விருதுநகர் எஸ்பி சீனிவாசபெருமாள் மற்றும் காவல் துறை உதவி மற்றும் துணை ஆணையர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் டிஜிபி சங்கர் ஜிவால், "காவல் துறையினர் பணியின்போது மன அழுத்தம் இன்றி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சைபர் கிரைம் குற்றங்களை அதீத கவனத்துடன் கண்காணித்து அத்தகைய குற்றங்களை தடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், பொதுமக்கள் காவல் துறையினர் நட்புறவை பேணிக் காப்பதை காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
உரிய காரணங்களோடு விடுமுறை விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும். அவ்வப்போது காவல் துறையினருக்கு மன அழுத்தம் போக்கும் வகையில் புத்துணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணாக்கர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களை கட்டுப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கினார்.
முன்னதாக, கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்று அதிகாலை வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினையா அல்லது பணிச்சுமை காரணமா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, காவல் துறையினரின் மன அழுத்தம் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT