Published : 08 Jul 2023 08:03 AM
Last Updated : 08 Jul 2023 08:03 AM

ஊருக்கு வெளியே போகட்டும் மதுக்கடைகள்: காஞ்சி நகர வீதிகளில் நடமாட அச்சப்படும் பெண்கள், மாணவிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மக்கள் நடமாட்டம் அதிமுள்ள பொது இடங்களில் இருக்கும் மதுக்கடைகளால் பெண்கள், மாணவிகள் அதிகம் இன்னலுக்கு ஆளாகின்றனர். பெரிய அளவில் டாஸ்மாக் கடைகள் காஞ்சிபுரத்தில் மூடப்படாததால் பொது வெளியில் மதுக் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகரப் பகுதிகளில் பொது இடங்களில் இருக்கும் மதுக்கடைகளால் பொதுமக்களுக்கு பெரும் இன்னல் ஏற்படுவதாகவும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் வருகின்றன. பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் ஏற்கெனவே மார்கெட் இருந்த பகுதிக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது.

அந்த மார்கெட்டை சுற்றி பல்வேறு வணிக நிறுவனங்கள், தர்ஹாக்கள் உள்ளன. அந்த இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. ஏகாம்பர நாதர் கோயில், சங்கரமடம், காமாட்சி அம்மன் கோயில் செல்லும் பக்தர்களுக்கும் இந்த வீதியை பயன்படுத்துகின்றனர்.

இந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்குவோர் தற்போது மார்கெட் இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட்டு வரும் இடத்திலேயே அமர்ந்து மது அருந்துகின்றனர். இவர்களால் அந்த வழியாக செல்லும் பெண்கள், மாணவிகள் பெரும் அச்ச மனநிலைக்கு ஆளாகின்றனர்.

சிலர் குடித்துவிட்டு ஆடைகள் கலைந்த நிலையில் சாலையில் விழுந்து கிடக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதனால் பலர் முகம் சுழித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதேபோல் சின்னகாஞ்சிபுரம் மார்கெட் அருகே ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அந்தக் கடையும் அதிக பொதுமக்கள் நடமாடும் பகுதியில் உள்ளது. இதுபோல் பெண்கள், மாணவிகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை வைக்கக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் சிலர் கூறும்போது, ஊருக்கு வெளிப்புறம் டாஸ்மாக் கடைகள் இருந்தால் அந்தக் கடையை தேடிச் செல்பவர்கள் மட்டும்தான் அங்கு செல்வர். இதுபோல் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை வைத்தால் வேறு சில வேலைகளுக்காகச் செல்பவர்கள் கண்ணில் இந்த கடைகள் படும்போது அவர்கள் கடையை நோக்கிச் செல்கின்றனர்.

இது குடிப்பதற்காக தூண்டும் செயல். இதனை தடுக்க மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் இந்தக் கடைகளை வைக்கக் கூடாது என்றனர். இது குறித்து சமூக ஆர்வலர் ஏ.சங்கர் கூறியது: காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் போராட்டத்துக்கு பிறகு சித்திரகுப்தர் கோயில், மேட்டுத் தெரு பகுதியில் இருந்து 2 மதுக்கடைகள் மட்டும் மூடப்பட்டுள்ளன. இது வெறும் கண்துடைப்பு.

பெரிய காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரம் என இரு மார்கெட்டிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டாஸ்மாக் கடை உள்ளது. ஏற்கெனவே பிரதான சாலைகளில் இருக்கும் கடைகளை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்த போது அமைச்சர் உள்ளிட்டோர் ஏற்றுக் கொண்டனர்.

ஆனாலும் டாஸ்மாக் கடைகளை அகற்றவில்லை. எனவே குறைந்தபட்சம் மக்கள் அதிகம் நாடுமாடும் பகுதிகளில் இருக்கும் கடைகளையாவது அப்புறப்படுத்தி ஊருக்கு வெளியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். காஞ்சியில் 2 மதுக்கடைகளை மூடியதால் மற்ற 3 கடைகளிலும் கூட்டம் இன்னும் அதிகரித்துள்ளது.

இதனால் பயன் இல்லை. இதுபோல் பொது இடங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. வழிபாட்டு தலங்கள், பெண்கள், மாணவிகள் நடமாடும் பகுதிகளில் கடைகளை வைப்பது சரியில்லை. இதனால் கோயில், தர்ஹாவின் புனிதம் கெடுகிறது. இவ்வாறு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x