Published : 08 Jul 2023 10:57 AM
Last Updated : 08 Jul 2023 10:57 AM

ஆவின் பால் அட்டை வழங்குவதற்கான புதிய நடைமுறையை திரும்பப் பெற வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஆவின் பால் அட்டை

சென்னை: ஆவின் பால் அட்டை வழங்குவதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நடைமுறையை திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆவின் பால் மற்றும் பால் பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம் வகைகள் என அனைத்துப் பொருட்களின் விலையையும் உயர்த்தி மக்களை துன்புறுத்திய திமுக அரசு, தற்போது ஆவின் பால் நுகர்வோர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே, பால் அட்டை மூலம் பால் வாங்குவோரிடமிருந்து அவர்களுடைய பெயர், முகவரி, கல்வித் தகுதி, தொழில், மாத சம்பளம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, ஆதார் எண் போன்ற விவரங்களை பெற ஆவின் நிர்வாகம் முயற்சி செய்தது. அட்டைதாரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக திமுக அரசு இதுபோன்ற மறைமுகமான நடவடிக்கைகளை எடுக்கிறது என்று குற்றம்சாட்டி, ஆவின் பால் அட்டைதாரர்களிடமிருந்து எவ்விதத் தகவலும் கோரக்கூடாது என்றும், ஆவின் பால் அட்டைகள் கேட்கும் அனைவருக்கும் அட்டைகள் வழங்கப்பட வேண்டுமென்றும் நான் அறிக்கை விடுத்திருந்தேன். இதனையடுத்து, எந்தத் தகவல்களும் ஆவின் பால் அட்டைதாரர்களிடமிருந்து கோரப்படவில்லை.

இந்த நிலையில், ஆவின் பால் அட்டைதாரர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் மீண்டும் ஆவின் நிர்வாகம் இறங்கியிருக்கிறது. சென்ற மாதம் வரை, எந்த பூத்தில் பொதுமக்கள் பால் வாங்குகிறார்களோ, அதே பூத்தில் பால் அட்டைகளும் மாதத்தில் ஒரு நாளில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. மக்கள் சிரமமின்றி பால் அட்டைகளை வாங்கி சென்றனர். வயதானவர்களும், அலுவலகம் செல்வோரும் தங்கள் வீட்டில் பணிபுரிபவர்கள் மூலம் பால் அட்டையை மாதா மாதம் பெற்று வந்தனர். காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறை மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

ஆனால், இந்த மாதத்திலிருந்து இந்த நடைமுறையில் மாற்றத்தினை திமுக அரசு கொண்டு வந்திருக்கிறது. இதன்படி, பால் பூத்துகளில் மாதம் ஒருநாள் பால் அட்டைகளை தருவதற்குப் பதிலாக, ஆங்காங்கே உள்ள ஆவின் அலுவலகங்களுக்கு சென்று அட்டைகளை பெற வேண்டும். மேலும், எண்ணியல் பரிமாற்றம் (Debit Card, Credit Card, etc.) மூலமாக மட்டுமே பால் அட்டைகள் வழங்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு அலுவலகத்தில் 20 முதல் 25 பூத்துகளுக்கான பால் அட்டைகள் வழங்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளதோடு மட்டுமல்லாமல், பால் அட்டைகள் வாங்குவதற்காக மணிக் கணக்கில் காத்திருக்கக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனை காரணமாக, பால் அட்டைகளை வீட்டில் பணிபுரியும் பணியாளர் மூலம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், அட்டைதாரர்கள் வசிக்கும் இடங்களுக்கும், ஆவின் அலுவலகங்கள் இருக்குமிடத்திற்கும் இடையேயான தூரம் இரண்டு கிலோ மீட்டர் என்பதால், ஏழையெளிய மக்கள், வயதானவர்கள் ஆட்டோவில் செல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இது பால் அட்டைதாரர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

பால் அட்டைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறதா அல்லது ஆவின் நிறுவனத்தில் ஊழியர் பற்றாக்குறை என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறதா என்பதை திமுக அரசு விளக்க வேண்டும். திமுக அரசின் இதுபோன்ற நடவடிக்கை பால் அட்டைதாரர்களை துன்புறுத்துவதற்கு சமம். கடந்த இரண்டு ஆண்டு கால திமுக அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணமே திமுக அரசுக்கு இல்லையென்பது தெளிவாகியுள்ளது.

ஆவின் பால் அட்டைகள் அந்தந்த பூத்துகளிலேயே வழங்கப்பட வேண்டுமென்பதுதான் பால் அட்டைதாரர்களின் விருப்பமாக உள்ளது. இதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு உள்ளது. முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பால் அட்டைதாரர்கள் எந்த பூத்துகளில் பால் பெற்றுக் கொண்டிருக்கிறார்களோ அதே பூத்தில் மாதாந்திர அட்டையை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x