Published : 08 Jul 2023 04:50 AM
Last Updated : 08 Jul 2023 04:50 AM
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ என்று பெயர் சூட்டி உள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், எந்த ஒரு தகுதியான பயனாளியும் விடுபடக் கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. முகாம் அலுவலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பங்கேற்றார். அவருடன் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, நிதித் துறை செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர்கள் சிலர் நேரிலும், பலர் காணொலி வாயிலாகவும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நோக்கத்துடன் செயல்படும் நமது ‘திராவிட மாடல்’ அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் ஒரு பொதுநோக்கு உண்டு. அதுதான் சமூகநீதி.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் பெண்களுக்கான எண்ணற்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, காவல்துறையில் பெண்களுக்கு பணி, அரசுப் பணிகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு, ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக மகளிரை நியமித்தது, முத்துலட்சுமி நினைவு மகப்பேறு திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்ததும் திமுக அரசுதான்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்திய கருணாநிதியின் அளப்பரிய பணிகளை நினைவுகூரும் வகையிலும், அவரது நூற்றாண்டு விழாவுக்குப் பெருமை சேர்க்கும் விதத்திலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும்.
மகளிர் உரிமைத் தொகையை மாதம்தோறும் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் இந்தத் திட்டத்தின் மூலம், நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், வேளாண் பணிகளில் ஈடுபடும் தாய்மார்கள், மீனவமகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரேநாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறுவர்.
இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அரசாணை வெளியிடுதல், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் என துறைகளுக்கான பங்களிப்பை சம்பந்தப்பட்ட துறைகள் குறித்த காலக்கெடுவுக்குள் செயல்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் இத்தகைய ஒரு மாபெரும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, இதை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மாவட்ட ஆட்சியர்கள் பங்கு முக்கியமானது. இத்திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்.15-ம்தேதி தொடங்கப்பட உள்ளது. இன்னும் 2 மாதமே உள்ளதால், கண்ணும் கருத்துமாக செயல்பட்டு, திட்டம் வெற்றியடைய உறுதுணையாக இருக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள், உரிய பயனாளிகளைக் கண்டறிவதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களைப் பெற பொது விநியோகக் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்.
சாலையோரங்களில் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள், இதர ஆதரவற்றோர் இத்திட்டத்தில் பயனடைவதை உறுதிசெய்ய வேண்டும். அவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவை இல்லாவிட்டாலும், அவற்றைப் பெற உரிய வழி செய்து, மகளிர் உதவித்தொகை கிடைக்கச் செய்ய வேண்டும்.
தலைமைச்செயலர் தலைமையில் மாநில கண்காணிப்புக் குழு, தேவைப்படும் ஒருங்கிணைப்பு பணியை செய்ய வேண்டும். இத்திட்டத்தின் மூலம் தமிழக மகளிரின் சமூகப் பொருளாதார நிலைமை பெருமளவில் மேம்படும் என நம்புகிறேன்.
எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனை அறிவிப்பது எளிது. செயல்படுத்துவது கடினம். முறையாகத் திட்டமிட்டால் செயல்படுத்துவதும் எளிதாகும். இத்திட்டத்தை எவ்வித புகாருக்கும் இடம்தராமல் செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
ஒரு கோடி பெண்களின் உயிர்த் தொகை என்பதை மனதில் வைத்து அக்கறை, பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள். இ்வ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT