Published : 08 Jul 2023 04:44 AM
Last Updated : 08 Jul 2023 04:44 AM
சென்னை: ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தகுதியான குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண், அதாவது 2002 செப்.15-ம் தேதிக்கு முன்பு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்துள்ள விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டும்விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
குடும்ப தலைவி யார்?: தகுதிவாய்ந்த குடும்பத்தில் குடும்பத் தலைவி விண்ணப்பிக்கலாம்.
குடும்ப அட்டையில் ‘குடும்பத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பெண், குடும்பத் தலைவியாக கருதப்படுவார். குடும்பத் தலைவராக ஆண் இருக்கும் பட்சத்தில் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்படுவார். திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்படுவர்.
ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும். 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய், 10 ஏக்கருக்கு குறைவாகபுன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம். பொருளாதார தகுதிகளுக்காக தனியாக வருவாய் சான்று,நில ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.
ரூ.2.5 லட்சத்துக்குமேல் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், வருமான வரி செலுத்துவோர், தொழில்வரி செலுத்துவோர் விண்ணப்பிக்க முடியாது. மத்திய, மாநிலஅரசு ஊழியர்கள், பொதுத் துறைநிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியர்களும் விண்ணப்பிக்க முடியாது. ஊராட்சி மன்றவார்டு உறுப்பினர்கள் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்றவை வைத்திருப்போர் விண்ணப்பிக்க இயலாது.
ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்குமேல் ஆண்டு விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்புதிட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம்இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இதில் பயன்பெற இயலாது.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினர்களை கொண்ட குடும்பங்கள், இத்திட்டத்தின் பிற தகுதிகளைபூர்த்தி செய்தால் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க, ஆண்ட்ராய்டு கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில்குடும்ப அட்டை எண், ஆதார்எண், தொலை பேசி, புகைப்படம், வயது, மாவட்டம், தொழில்,வீடு வாடகையா? சொந்தமா?நிலம் வைத்திருப்பவரா, வாகனம் வைத்துள்ளவரா, வங்கிக் கணக்குஎண், உறுதி மொழி ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT