Published : 08 Jul 2023 01:21 AM
Last Updated : 08 Jul 2023 01:21 AM

தருமபுரி | வன விலங்கு வேட்டைக்கு உதவும் பிரத்யேக ஹாரன் விற்பனை - கடைகளுக்கு வனத்துறை அபராதம்

தருமபுரி: தருமபுரியில் வன விலங்கு வேட்டைக்கு உதவும் பிரத்யேக ஹாரன் விற்ற எலெக்ட்ரானிக் பொருள் விற்பனையாளர்கள் 3 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

வனக் குற்றங்களை தடுத்தல், வனத்தில் பசுமைப் பரப்பை அதிகரித்தல் உள்ளிட்ட பணிகளில் தருமபுரி மாவட்ட வனத்துறை அண்மைக் காலமாக தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒருபகுதியாக வன விலங்குகளை வேட்டையாடுவோரை கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது வேட்டைக்காரர்களுக்கு முயல் ஹாரன் விற்ற எலெக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர்கள் 3 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

தருமபுரி நகரில் எலெக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வரும் புருஷோத்தமன்(55), திருநீலகண்டன்(48), சரவணன்(36) ஆகிய 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல, முயல் ஹாரன் மற்றும் அதனுடன் தொடர்புடைய பேட்டரி ஆகியவற்றை விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த பென்னாகரம் முள்ளுவாடி பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம்(50) என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘சில எலெக்ட்ரானிக்ஸ் கடைக்காரர்கள் வேட்டைக்காரர்களுக்கென பிரத்யேக ஹாரன் போன்ற கருவி ஒன்றை விற்பனை செய்கின்றனர். இதை பேட்டரியுடன் இணைத்து இயங்கச் செய்யும்போது இந்த ஹாரனில் இருந்து மெல்லிய ஓசையுடன் கூடிய ஒருவித அதிர்வலை உருவாகிறது. இது முயல்களை ஈர்க்கும் தன்மை கொண்டதாக உள்ளதால் இவற்றின் உதவியுடன் வேட்டைக்காரர்கள் வனத்தில் முயல்களை எளிதாக வேட்டையாடுகின்றனர்.

மான் உள்ளிட்ட வேறு சில விலங்கினங்களை ஈர்க்கும் வகையிலான ஓசைகளை எழுப்ப இந்த கருவியை எளிதாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிகிறது. இந்தக் கருவிகளும் வேட்டைக்காரர்களும் இணையும்போது வனவிலங்குகள் கணிசமாக அழிவை சந்திக்க நேரிடும் என்பதால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு உத்தரவிட்டுள்ளார். எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் உள்ளிட்டோர் மீது தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மாவட்டம் முழுக்க தொடர்ந்து மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x