Published : 07 Jul 2023 06:44 PM
Last Updated : 07 Jul 2023 06:44 PM
கோவை: காவல் துறையினருக்கு ஆண்டுக்கு இருமுறை 10 அல்லது 15 நாட்கள் விடுப்பு அளிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யோசனை தெரிவித்துள்ளார். மேலும், “டிஐஜி விஜயகுமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார் என்றால், போர்க்கால அடிப்படையில் காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்” என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் இன்று (ஜூலை 7) செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “காவல் துறையில் குறிப்பாக கீழ்மட்டத்தில் காவலர், தலைமைக் காவலர், உதவி ஆய்வாளர் வரையுள்ளவர்களுக்கு வேறு எந்தத் துறையிலும் இல்லாத வகையில், உச்ச கட்ட மன அழுத்தம் உள்ளது. அதற்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு நிர்வாக ரீதியாக மன அழுத்தம் உள்ளது. அவர்களுக்கு வேலைப்பளு இருக்கும். மேலும், குடும்பம் ஒரு இடத்திலும், பணிபுரியும் இடம் பல நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் ஒரு இடத்திலும் இருக்கும். காவல் துறையை முதலில் சீரமைக்க வேண்டும். காவல் துறையினரின் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். இதில், தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும்.
தமிழக காவல் துறையில் தற்போது பத்தாயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதனை நிரப்பிவிட்டாலே தற்போது உள்ள காவலர்களுக்கான பணி அழுத்தம் என்பது குறையும். எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின், டிஐஜி விஜயகுமாருக்கு மரியாதை செலுத்துகிறார் என்றால், போர்க்கால அடிப்படையில் இரண்டு ஆண்டுகளில் காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதற்காகவே முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவின் அறிக்கை தற்போது வரை வரவில்லை. அதனை பொதுவெளியில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும்.
காவல்து றையினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பணியிடமாறுதல் கூடாது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு கழிப்பிட வசதிகூட இருப்பதில்லை. எனவே, காவலர்கள் பணி செய்யும் இடங்களில் உணவு, கழிப்பிட வசதி, குடிநீர், போக்குவரத்து வசதி ஆகியவற்றை அளிக்க வேண்டும். கட்டாயமாக வாரத்துக்கு ஒருநாள் விடுப்பு அளிக்க வேண்டும். மேலும், ஆண்டுக்கு இருமுறை 10 அல்லது 15 நாட்கள் மொத்தமாக விடுப்பு அளிக்க வேண்டும்.
டிஐஜி விஜயகுமார் மரணம் குறித்து உயர் நீதிமன்ற மேற்பார்வையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். இறப்புக்கான காரணங்கள் குறித்து அவர்கள் முழுமையாக ஆராய வேண்டும். விஜயகுமாரின் வாரிசுக்கு 'குரூப் ஏ' தகுதியில் அரசு வேலை அளிக்க வேண்டும். தற்கொலை தூண்டப்பட்டதா எனவும், மன அழுத்தம் உட்பட எல்லா காரணங்களையும் ஆராய வேண்டும்.
கோவையின் முன்னாள் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை விசாரணை ஒரு பக்கம் நடந்து வருகிறது. அது தொடர்பாக வழக்கு கோவையிலும் உள்ளது. இந்நிலையில், விஜயகுமாரின் தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. எதையும் தொடர்புபடுத்தி நாங்கள் பேசவில்லை. இருப்பினும், எல்லாவற்றையும் முழுமையாக பார்க்க வேண்டும். ஒரு வழக்கை எப்படி கையாள வேண்டும் என காவல் துறை அதிகாரிகள் மீது உச்சபட்ச மன அழுத்தம் உள்ளது.
மனதளவில் பலவீனமான மனிதர் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஐபிஎஸ் பயிற்சி அனைத்தையும் தாண்டி வர முடியாது. தற்கொலைக்கு தூண்டிய காரணம் என்ன என்பதை செல்போன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிய வேண்டும்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT