Published : 07 Jul 2023 06:25 PM
Last Updated : 07 Jul 2023 06:25 PM
புதுச்சேரி: புதுச்சேரியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,328 கோடி சிறப்பு நிதியாக வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, அம்மாநில முதல்வர் ரங்கசாமி இன்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தின் விவரம்: 'மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. உங்களது உறுதியான தலைமையின் கீழ் பொருளாதாரத்தில் இந்தியா உலகின் முதல் 5 இடங்களுக்கு முன்னேறியுள்ளது. இதற்காக புதுச்சேரி மக்கள் சார்பாக, மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசின் ஆதரவின் காரணமாக 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அரசு முழு பட்ஜெட்டினை தாக்கல் செய்துள்ளது. உண்மையான டபுள் எஞ்சின் அரசாங்கத்தால், புதுச்சேரி மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களையும், நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
நீங்கள் புதுச்சேரிக்கு வந்தபோது வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் 'பெஸ்ட்' புதுச்சேரியாக இருக்க வேண்டும் என்று விரும்பியதை நினைவுகூர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெஸ்ட் புதுச்சேரி அமைவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மேம்படுத்தும் வகையில் மூலதன உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2,328 கோடி வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக, விமான நிலைய விரிவாக்கம் ரூ.425 கோடி, ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் அமைக்க ரூ.420 கோடி, சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி, மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க ரூ.500 கோடி, சட்ட பல்கலைக்கழகம் அமைக்க ரூ.483 கோடி என மொத்தமாக ரூ.2,328 கோடி சிறப்பு நிதியாக கோரப்பட்டிருக்கிறது.
மேலும், புதுச்சேரியின் நீண்ட கால நிதி சிக்கல்களை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை மத்திய நிதி கமிஷன் வரம்புக்குள் சேர்க்க வேண்டும். மூலதன முதலீட்டுக்கான மாநிலங்களுக்கு நிதி உதவி திட்டத்தின் கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ப்பது அல்லது மூலதன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான சிறப்பு நிதி ஒதுக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு இணையாக 90:10 என்ற அளவில் புதுச்சேரிக்கும் நிதி உதவியினை வழங்க வேண்டும். புதுச்சேரி மக்களின் நலன் கருதி, அளிக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து மேற்கூறிய நிதிப் பிரச்சனைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். மேலும் நிதி கமிஷனில் இடம் பெறாததால் நிதி ஆயோக் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நிதிப் பகிர்வு புதுச்சேரிக்கு கிடைப்பதில்லை.
எனவே, அரசியலமைப்பின் 280(3) வது பிரிவைத் திருத்தம் செய்து நிதிக் குழுவின் வரம்புக்குள் புதுச்சேரியை சேர்க்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதே நேரத்தில் புதுச்சேரியில் நிதி சீர்த்திருத்தங்களை செயல்படுத்துவதில் அனைத்து விஷயங்களிலும் மாநிலங்களுக்கு இணையாகவே கருத்தப்படுகிறது. மேலும் கடந்த 2007-ம் ஆண்டு முதல் தனி பொதுக் கணக்கு ஆரம்பித்து சட்டப்பேரவையுடன் கூடிய முதல் யூனியன் பிரதேசமாகவும் இருக்கிறது. மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களில் (மத்திய-மாநில) நிதி பங்கீட்டில் புதுச்சேரியை மாநிலங்களுக்கு ஒத்ததாக கருதுகின்றனர்.
இதன் காரணமாக மத்திய அரசின் உதவி இல்லாததாலும், சந்தை கடன்களுக்கு அதிக வட்டி செலுத்துவது, நிதி சுமை ஏற்பட்டு சுகாதாரம், கல்வி போன்ற துறைகளுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த உண்மைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு புதுச்சேரியின் இந்த யூனியன் பிரதேசத்தை மூலதன முதலீட்டுக்கான மாநிலங்களுக்கு நிதியுதவி என்ற திட்டத்தில் சேர்க்க வேண்டும். மத்திய அரசின் நிதி உதவி திட்டங்களில் 37 முதன்மைத் திட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதில் புதுச்சேரி அரசும் முழு அளவிலான மாநிலமாகவோ அல்லது யூனியன் பிரதேசமாகவோ கருத்தப்படாத இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறது. எனவே மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களுக்கான நிதி பங்கீடு முறைமை ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு இணையாக கொடுக்க வேண்டும். அதாவது புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மத்திய நிதி உதவி திட்டம் மத்திய அரசு 90 சதவீதம் மற்றும் மாநிலம் 10 சதவீதம் என்ற முறைமையை கடைபிடிக்க வேண்டும்' என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT