Last Updated : 07 Jul, 2023 03:24 PM

 

Published : 07 Jul 2023 03:24 PM
Last Updated : 07 Jul 2023 03:24 PM

கலப்புத் திருமணம் செய்த பெண்ணுக்கு தொட்டியம் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு: கோட்டாட்சியர் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு 

மதுரை: கலப்புத் திருமணம் செய்துகொண்ட பெண்ணை கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்டது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த வனிதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''நானும் செந்தில்குமார் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நான் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் என்னையும், என் கணவரையும் எங்கள் ஊரில் உள் ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் மகா மாரியம்மன் கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர். கிராம திருவிழாக்களிலும் எங்களை அனுமதிப்பது இல்லை.

இந்நிலையில் கோயிலில் ஜூலை 9-ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கு எங்களிடம் வரி வாங்கவில்லை. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் கூடாது என கூறியுள்ளனர். எனவே கும்பாபிஷேக நிகழ்வுக்கு எங்களிடம் வரி வசூலிக்குவும், சாமி தரிசனம் செய்ய எங்களை அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பில், கடந்த 3 ஆண்டுகளாக கிராம நிகழ்ச்சிகள், கோயில் விழாக்களில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் புகார் குறித்து விசாரித்த\போது கோயில் விழாக்களில் மனுதாரர் அனுமதிக்கப்பட்டதாக கோயில் குழுவினர் தெரிவித்தனர் என்றார். கோயில் குழு தரப்பில், ஜூலை 9-ல் நடைபெறும் கும்பாபிஷேகத்தில் அனைவரும் பங்கேற்க அனுமதி உண்டு. யாரையும் தடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ''மனுதாரர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் 3 ஆண்டுகள் கிராம விழாக்கள் மற்றும் கோயில் விழாக்களில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டதா? இதுபோன்ற பழக்க வழக்கம் தொட்டியம் கிராமத்தில் உள்ளதா என வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி ஜூலை 20-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கும்பாபிஷேக விழாவுக்கு மனுதாரரிடம் வரி வசூலிக்க வேண்டும். கும்பாபிஷேகத்தில் மனுதாரரை அனுமதிக்க வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x