Published : 07 Jul 2023 03:03 PM
Last Updated : 07 Jul 2023 03:03 PM

செந்தில் பாலாஜி வழக்கு | ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும்? - உயர் நீதிமன்றம் கேள்வி

ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

சென்னை: “அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்த வழக்கில் ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும்?” என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். செந்தில் பாலாஜியின் வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன.செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஏற்க மறுத்த நிலையில், துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த மாதம் 16-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிக்கடையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி கொளத்தூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோரும் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக ஜூன் 29-ம் தேதி மாலையில் உத்தரவு பிறப்பித்த ஆளுநர், அடுத்த சில மணி நேரங்களில் அந்த உத்தரவை நிறுத்திவைப்பதாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், எம்.எல்.ரவி தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்திவைத்த தமிழக ஆளுநர் ரவியின் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். மேலும், அவரது மனுவில், அரசியல் சாசனத்தின்படி ஆளுநர் எடுத்த முடிவை, மறுபரிசீனை செய்ய முடியாது. நீதிமன்றம்தான் அதை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும். ஆளுநர் முடிவு எடுத்த பிறகு, வேறு யாருடனும் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ள போதும், அந்த உத்தரவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை. மத்திய உள்துறை அமைச்சர், அட்டர்னி ஜெனரல் ஆலோசனை பெற நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஆளுநருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? தீர்ப்பு ஏதேனும் உள்ளதா?” என கேள்வி எழுப்பி, அவ்வாறான உத்தரவுகள் இருப்பின் அவற்றை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பில், செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சராக நீடிக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இதனால், மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார் என கேள்வி எழுப்பினார். மக்கள் வரிப்பணத்தில் அவருக்கு ஊதியம் வழங்கப்படுகிறது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் எம்எல்ஏவாகவும் இருக்கிறாரே என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கோரிய ஜெ.ஜெயவர்த்தன், எம்.எல்.ரவி, ராமச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையையும் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x