Published : 07 Jul 2023 09:31 AM
Last Updated : 07 Jul 2023 09:31 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகரப் பகுதியில் ஆவின் பாலகம் உட்பட பல்வேறு கடைகள் வைக்க அனுமதி கோரி மாற்றுத் திறனாளிகள் பலர் மனு அளித்துவிட்டு காத்திருக்கின்றனர். இந்த மனுக்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, தகுதி உள்ளவர்களுக்கு விரைவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு பொது இடங்களில் கடைகள் அமைக்கப்பட்டு பலருக்கு வாடகைக்கு விடப்படுகின்றன. மேலும் கடை வைக்க இடம் ஒதுக்கி அனுமதியும் அளிக்கப்படுகிறது.
ஆனால், இவ்வாறு ஒதுக்கப்படும் இடங்களில் சிலர் கடை நடத்துவது இல்லை. இவர்கள் குறைந்த வாடகையை செலுத்திவிட்டு, வேறு நபர்களுக்கு உள்வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகின்றனர். அதேநேரம், உண்மையிலேயே தகுதியான மகளிர் சுயஉதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் ஆகியோர் கடைகளை கேட்டு காத்திருக்கும் நிலை உள்ளது.
எனவே, கடை நடத்தாமல் உள்வாடகைக்கு விடுபவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்துவிட்டு, தகுதி உள்ளவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்த 14 பேர் ஆவின் பாலகம் மற்றும் சில கடைகள் அமைக்க அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். ஆனால் இவர்களில் யாருக்கும் கடைகள் ஒதுக்கப்படவில்லை. இவர்களுக்கு கடை ஒதுக்குவதற்கான தீர்மானம் மாநகராட்சி கூட்டத்தில் 2 முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாற்றுத் திறனாளிகள் அமைப்பை சேர்ந்த சிலர் கூறுகின்றனர்.
இதுகுறித்து இந்த அமைப்பை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, ‘‘காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே வெளியூர் பேருந்துகள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட சில இடங்களில் கடைக்கு அனுமதி கோரி மனு கொடுத்துள்ளோம். ஆவின் பாலகம் அமைக்க 7 மனுக்கள் உட்பட மொத்தம் 14 மனுக்கள் கொடுத்துள்ளோம். ஆவின் நிர்வாகிகள் குறைந்த வைப்புத் தொகை பெற்றுக்கொண்டு எங்களுக்கு பொருட்கள் தருவதாகவும் கூறியுள்ளனர்’’ என்றனர்.
இதுபற்றி காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியிடம் கேட்டபோது, ‘‘கடைகள் ஒதுக்கக் கோரி மனு அளித்துள்ள மாற்றுத் திறனாளிகளில், உண்மையில் தகுதி உள்ளவர்கள் யார் என்று ஆய்வு செய்து வருகிறோம். முறையாக பரிசீலித்து கடைகள் ஒதுக்கப்படும்’’ என்றார்.
நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘மனு கொடுத்துள்ள அனைவரும் ஒரு சங்கத்தின் மூலம் வந்துள்ளனர். இவர்களுக்கு மட்டும் கடை ஒதுக்கினால், சங்கம் சாராதவர்கள், வேறு சில சங்கங்களை சேர்ந்தவர்களுக்கு பாதகமாக அமையக்கூடும். மாற்றுத் திறனாளிகளுக்கு கடை ஒதுக்குவது அவசியம். அதேநேரம், பாரபட்சமின்றி முறையாக கடைகள் ஒதுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றனர்.
சமூக ஆர்வலர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தகுதி உள்ள மாற்றுத் திறனாளிகளை தேர்வு செய்வதில் மாநகராட்சிக்கு சிக்கல் இருந்தால், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் உதவியை கோரலாம். பாரபட்சமின்றி மாற்றுத் திறனாளிகளுக்கு கடைகள் ஒதுக்குவது அவசியம். அதேபோல மாற்றுத் திறனாளிகளின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி வேறு நபர்கள் கடைகளை பெற அனுமதிக்க கூடாது. அவ்வாறு அனுமதி பெற்றது கண்டறியப்பட்டால், அந்த அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT