Published : 07 Jul 2023 08:09 AM
Last Updated : 07 Jul 2023 08:09 AM
கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்தவர் சி.விஜயகுமார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இன்று காலை வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு சென்று விட்டு காலை 6.50 மணிக்கு தனது முகாம் அலுவலகத்துக்கு வந்தார்.
பின்னர் தனது பாதுகாவலர் ரவியிடம் இருந்த கைத்துப்பாக்கியை வாங்கி தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு சக காவலர்கள் வந்து பார்த்த போது டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
ரேஸ்கோர்ஸ் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் குடும்ப விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக விஜயகுமார் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. இருப்பினும் பணிச்சுமை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
நேரடி ஐபிஎஸ் அதிகாரி: கடந்த 2009-ம் ஆண்டு நேரடி ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் விஜயகுமார் சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு டிஐஜி பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி முதல் பணியாற்றி வந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT