Published : 07 Jul 2023 04:43 AM
Last Updated : 07 Jul 2023 04:43 AM

இபிஎஸ்ஸுக்கு எதிரான ரூ.4,800 கோடி மதிப்பிலான முறைகேடு: புதிதாக விசாரிக்க ஊழல் தடுப்பு ஆணையர் ஒப்புதல் என தமிழக அரசு தகவல்

சென்னை: முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான ரூ. 4,800 கோடி மதிப்பிலான முறைகேடு தொடர்பாக புதிதாக விசாரணை நடத்த ஊழல் தடுப்பு ஆணையர் அனுமதி வழங்கியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கடந்த2018-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழகத்தில் முதல்வராக பதவி வகித்த பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருந்த நெடுஞ்சாலைத் துறையில் ரூ.4,800 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன.

குறிப்பாக பழனிசாமியின் மகன் மிதுன்குமாரின் நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கத்துக்கும், சம்பந்தி பி.சுப்பிரமணியத்துக்கும் இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.200 கோடியில் முடிய வேண்டிய திட்டத்துக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல பல்வேறு திட்டப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பழனிசாமிக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐவிசாரிக்க கடந்த 2018-ம் ஆண்டுஉத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதிதரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இந்தவழக்கு தொடர்ந்தபோது இருந்த நிலை தற்போது இல்லை. தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த வழக்கை வாபஸ் பெறுகிறோம், என்றார்.

அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான இந்த வழக்கில் விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கிவிட்டது. எனவே அவருக்கு எதிராகபுதிதாக விசாரணை நடத்த ஊழல் தடுப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றார்.

அதற்கு பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். முகமது ரியாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இதுதொடர்பாக ஏற்கெனவே லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்போது அந்த விசாரணை அறிக்கையை பரிசீலிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த சூழலில் இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கக்கூடாது, என்றார்.

அதையடுத்து நீதிபதி, இந்தவழக்கு விசாரணையை வரும்ஜூலை 13-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x