Published : 07 Jul 2023 03:51 AM
Last Updated : 07 Jul 2023 03:51 AM

சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: உதவி செயற்பொறியாளர் அறையில் ரூ.2.15 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நீர்வளத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய சோதனை நடத்தினர். அப்போது, உதவி செயற்பொறியாளர் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.2.15 லட்சம் கைப்பற்றப்பட்டது.

சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை எதிரே உள்ள ‘எழிலகம்’ அரசுக் கட்டிட வளாகத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு பொதுப்பணித் துறையின் நீர் மேலாண்மை பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர், ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்கள் சென்றன.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறை இயக்குநர் அபய்குமார் சிங் உத்தரவிட்டார். அதன்படி, லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் இரவு எழிலகம் வளாகத்துக்குள் நுழைந்து, திடீர் சோதனை நடத்தினர்.

குறிப்பாக, நீர்வளத் துறையின்கீழ் இயங்கும் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனின் அறையில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவரது அறையில் ரூ.2 லட்சத்து 14,540 இருந்தது தெரியவந்தது.

அந்த பணத்துக்கு அவரிடம் உரிய கணக்கு இல்லாததால், அதை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம், நீர் மேலாண்மை துறையில் உள்ள ஒப்பந்ததாரர்களின் உரிமத்தை புதுப்பித்துக் கொடுப்பதற்காக, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட லஞ்சமாக இருக்கலாம் என்று கருதுகிறோம்.

இந்த பணத்தை யார், எதற்காககொடுத்தனர், இதற்கு முன்பு இதேபோல லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதா, இதனால் ஆதாயம் அடைந்தவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x