Published : 07 Jul 2023 06:08 AM
Last Updated : 07 Jul 2023 06:08 AM
சென்னை: ரயில்வே திட்டங்களில் வட மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் மோடி, தென்னக ரயில்வேவை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜக ஆட்சி அமைந்ததுமுதல் தென்னக ரயில்வே தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ராமேசுவரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டம் 2006-07நிதியாண்டில் தொடங்கப்பட்டு, ரூ.11,400 கோடி நிதி தேவை என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2020-ம் ஆண்டில் ரூ.211 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. 2023-24 ஆண்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மத்திய பாஜக அரசால் அறிவிக்கப்பட்ட சென்னை-மாமல்லபுரம்- கடலூர், திண்டிவனம்-செஞ்சி-நகரி, திண்டிவனம்- திருவண்ணாமலை, தூத்துக்குடி- அருப்புக்கோட்டை- மதுரை ஆகிய ரயில் திட்டங்களுக்கு கடந்த 9 ஆண்டுகளாக எந்தவிதமான ஆய்வோ, நிதி ஒதுக்கீடோ செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதைவிட பெரிய அநீதியை பாஜக அரசு தமிழ கத்துக்கு இழைக்க முடியாது.
தமிழகத்துக்கு கடந்த 9 ஆண்டுகளில் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு வழங்கிய ரூ.10 லட்சத்து 73 ஆயிரம் கோடியை மறைத்திருக்கிறார். தமிழகம் தொடர்ந்து மத்திய பாஜக அரசால் பலமுனைகளில் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி, உத்தரபிரதேசம், குஜராத் மாநிலத்துக்கு காட்டும் அக்கறையை தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு காட்டுவதில்லை. இதற்கு இன்று தொடங்கும் தனி சரக்கு ரயில் பாதை திட்டமே தக்க சான்றாகும். இவ்வாறு அறிக்கையில் அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT