Published : 07 Jul 2023 04:07 AM
Last Updated : 07 Jul 2023 04:07 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் மழைநீர் கால்வாய்களை தூர்வாராததால் கழிவு நீரில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பை நிறைந்து காணப்படுகிறது. குடிநீருடன் கழிவு நீர் கலப்பதால் நகரில் டைபாய்டு, மஞ்சள் காமாலை நோய்கள் வேகமாக பரவுகின்றன.
மதுரையில் மாநகராட்சியின் கட்டுப் பாட்டில் 13 மழைநீர் கால்வாய்கள் வடகிழக்குப் பருவமழைக்கு முன் ஆண்டுதோறும் தூர்வாரப்பட வேண்டும். தூர்வாராததால் குப்பை, உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அவை நிரந்தரமாக அள்ளப்படாமல் தேங்கியதால் மழை பெய்யும் போது தண்ணீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது.
இந்தக் கால்வாய்களில் ஆங்காங்கே உள்ள கழிவு நீர் கால்வாய்களில் இருந் தும் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. நகர்ப் பகுதியில் பெரும்பாலான குடியிருப்புகளில் பாதாள சாக்கடை கால்வாய்கள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை. பொதுமக்கள் அருகில் உள்ள இந்த மழைநீர் கால்வாய்களில் நிரந்தரமாக கழிவுநீரை திறந்து விடுகின்றனர். வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் இந்த மழைநீர் கால்வாய்களில், மழைநீர் தடையின்றி செல்ல முடியாமல் லேசான மழைக்கே குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
இது குறித்து மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா (அதிமுக) கூறியதாவது: ‘‘மழைநீர் கால்வாய் களை பொது நிதியைக் கொண்டு தான் தூர்வார வேண் டும் என்பது விதி. ஆனால், சிறப்பு நிதி வராததால் தூர்வார முடிய வில்லை என்றுமாநகராட்சி சமா ளிக்க முடியாது. அதி முக ஆட்சியில் வரியைக் உயர்த்தவில்லை. அப்படியிருந்தும் ஆண்டுதோறும் மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டன.
அதற்கான ஆதாரங்களையும் காட்டி இதற்கு முன் பதவியில் இருந்த மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தேன். தற்போது புதிதாக வந்த ஆணையர் பிரவீன்குமாரிடமும் பருவமழைக்கு முன் 13 மழைநீர் கால்வாய்களை தூர்வார மனு அளித்துள்ளோம். ஆனால், நட வடிக்கை எடுக்கவில்லை.
கழிவு நீர் அருகில் உள்ள குடிநீர் குழாய்களுடன் கலப்பதால் அந்த தண்ணீரைக் குடிக்கும் மக்கள் மஞ்சள் காமாலை, டைபாய்டு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைகை ஆற்றுப் பகுதி வார்டுகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் டைபாய்டு, மஞ்சள் காமாலை பாதித்த நோயாளிகள் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர். மாநகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு, வெளியேற்றம் இன்னும் பழைய முறையே பின்பற்றப்படுகிறது. காலத்துக்கு ஏற்ப கழிவுநீரைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேயர் இந்திராணி கூறுகையில், ‘பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஓரிரு நாளில் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மழைநீர் கால்வாய்கள் அனைத்தையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT