Last Updated : 06 Jul, 2023 06:56 PM

2  

Published : 06 Jul 2023 06:56 PM
Last Updated : 06 Jul 2023 06:56 PM

பழநி கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்களை வேறு யாருக்கும் கொடுக்க கூடாது: எச்.ராஜா

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் பசுக்கள் உயிரிழக்கும் நிலையில் உள்ளன என்று தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தில் உள்ள பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான கோசாலையை, தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று (ஜூலை 6) பார்வையிட்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''கோயில் நிலங்களை பொது உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது. கோயில் நிலங்கள் ஆன்மிகத்துக்காக, இந்து மத வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பழநி கோயில் கோசாலை 88.79 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்த கோசாலை ஒருங்கிணைந்த கோசாலையாகும். சிறிய கோயில்களில் தானமாக வழங்கப்படும் பசுக்களை இங்கு கொண்டு வந்து விடப்படுகிறது. இங்குள்ள பசுக்கள் உயிரிழக்கும் நிலையில் உள்ளன. சமீபத்தில் 17 பசு மாடுகள் உணவு கிடைக்காமல் இறந்துள்ளதாக மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்துள்ளனர். இங்குள்ள பசுக்களை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கொடுப்பதாக கூறி, கடந்த 3 நாட்களில் 218 பசுக்கள் திமுகவினருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்களை வேறு யாருக்கும் கொடுக்க கூடாது. அமைச்சர்கள் சேகர்பாபுவும், சக்கரபாணியும் பழநி முருகன் கோயிலை மொட்டையடிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

பழநி முருகன் கோயில் நிலத்தை மாற்று மதத்தினர் ஆக்கிரமித்து இருந்தால் ஒரு மாதத்துக்குள் மீட்க வேண்டும். இந்த மத சின்னம் அணிந்திருந்தால்தான் கோயிலுக்கு செல்ல முடியும். இது அறநிலையத் துறையின் விதி அல்ல. சட்டத்தினுடைய விதி. இந்த நிலத்தை சிப்காட் அமைக்க கொடுக்க கூடாது'' இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x