Published : 06 Jul 2023 06:50 PM
Last Updated : 06 Jul 2023 06:50 PM
சென்னை: ''தமிழக ஆளுநருடன் மாநில அரசு மோதல் போக்கை கடைபிடிக்கக் கூடாது'' என்று ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதகிருஷ்ணன் கூறினார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “ஓர் உயர்ந்த நீதி எதுவென்றால் நம்முடைய வாழ்க்கை சட்டத்தை மட்டுமல்ல தர்மத்தை பொறுத்து அமைந்துள்ளது. நாம் பல்வேறு மொழிகளை பேசுபவர்களாக இருந்தாலும், கலாச்சாரம், பண்பாட்டை பொறுத்தவரை அனைவரும் ஒற்றுமையாக இருந்து வருகிறோம். அந்த வகையில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக காசி தமிழ் சங்கமம், செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு சிறப்பாக நடத்தியுள்ளது. தமிழின் பெருமையை பாரத தேசம் முழுவதும் எடுத்துச் செல்வதற்கு இந்நிகழ்ச்சிகள் பேருதவி புரிந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பாலும் இந்தி மொழி பேசப்படுகிறது. உள்ளூர் மொழிகளும் உள்ளன. காசி தமிழ் சங்கமம் மற்றும் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியைப் போல, ஜார்க்கண்ட் மாநிலத்துடன் தமிழ்நாடு இணைந்து நிகழ்ச்சி நடத்த எதிர்காலத்தில் திட்டமிடப்படும். தமிழகமும் ஜார்க்கண்ட்டும் இணைந்து வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் என்னுடைய கவனம் இருக்கிறது. மருத்துவம், தொழில் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட பல துறைகளிலும் இரு மாநில ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்படும். அதற்கான செயல்வடிவங்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும்.
தமிழகத்தில் அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் போக்கு நிலவுவது ஏற்புடையுதல்ல. அரசின் அணுகுமுறையும், அனுசரணையும் ஒரேமாதிரி இருக்க வேண்டும். அப்படி இருக்கிறபோது ஆளுநரின் அணுகுமுறையும், அதை சார்ந்ததாக மாறும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கின்றன. அரசும் மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அப்போது, ஆளுநரின் அணுகுமுறையும் மக்கள் நலன் சார்ந்தே அமையும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆளுநர் அவர் கடமையைச் செய்கிறார். அதை வேறொரு கண்கொண்டு பார்ப்பதாக நான் உணர்கிறேன். எனக்குத் தெரிந்தவரையில் தமிழக ஆளுநர் தமிழக மக்கள் நலனில் அதிக அக்கறைக் கொண்டவராக இருக்கிறார். தமிழக அரசு, ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், ஆளுநரை அனுசரித்து அவருடைய முழு ஆதரவையும் பெற வேண்டும் என்ற நோக்கில் இருக்க வேண்டும். ஏனெனில், ஆளுநர் என்பவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவர் இல்லை'' என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT