Published : 06 Jul 2023 06:22 PM
Last Updated : 06 Jul 2023 06:22 PM

ஆய்வுக் குழுவுக்கு எதிராக போராடிய பரந்தூர் கிராம மக்கள் கைது: தினகரன் கண்டனம்

சென்னை: “ஜனநாயக முறையில் போராடிய பரந்தூர் கிராம மக்கள் கைது செய்யவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் ஆய்வுக்காக ஏற்படுத்தப்பட்ட குழு, முன்பே திட்டமிடப்பட்ட முடிவுகளை மனதில் வைத்துக்கொண்டு, பெயரளவுக்கு ஓர் ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாக வந்த செய்தியை அறிந்து, அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக முறையில் போராடிய கிராம மக்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

பரந்தூர் விமான நிலைய பகுதியில் உள்ள நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்தும், அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்தும் ஆராய அரசால் தேர்வு செய்யப்பட்ட நிறுவனம் முறையான வகையில் ஆய்வை மேற்கொள்ளாமல் ஒப்புக்கு ஆய்வை நடத்தவுள்ளதாக வந்த செய்தியை அறிந்து, பரந்தூரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் பரந்தூர்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஊர்வலமாக செல்ல முயன்றபோது போலீசார் அவர்களை பலவந்தமாகத் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விவசாயிகளின் காவலராக காட்டிக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த ஒற்றைக் காலில் நிற்பதும், இத்தனை நாட்களாக போராடிவரும் மக்களை உதாசீனப்படுத்துவதும், விமான நிலையத்துக்கு மாற்று வழிகளைப் பற்றி சிந்திக்க மறுப்பதும் ஏன் என அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆகவே, பரந்தூர் மக்களும் தமிழ்நாட்டு மக்கள்தான், வேற்றுக் கிரக வாசிகள் அல்ல என்பதை முதல்வர் உணர்ந்து அவர்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு, ஜனநாயக முறையில் போராடியவர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவித்திட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x