Published : 06 Jul 2023 05:18 PM
Last Updated : 06 Jul 2023 05:18 PM

வீடுகளுக்கு குழாய் மூலமாக எரிவாயு வழங்கும் திட்டம்: சென்னையில் முதல்முறையாக செயல்பாட்டுக்கு வந்தது

சென்னை: சென்னையில் முதல்முறையாக குழாய் மூலமாக வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் அண்ணாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இறக்குமதி செலவை குறைப்பதற்காகவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில், திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் துறைமுகத்தில் எல்என்ஜி எனப்படும் திரவ நிலை எரிவாயு முனையத்தை அமைத்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் திரவ நிலையில் எரிவாயு இந்த முனையத்துக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குழாய் வழித்தடம் மூலம் எரிவாயு எடுத்துச் செல்வதற்காக குழாய் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் முதற்கட்டமாக இந்தத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசுடன் டோரன்ட் கேஸ் (torrent gas) நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே நாகப்பட்டினம், காரைக்கால், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் பயன்பாட்டில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் முதல்முறையாக அண்ணா நகரில் உள்ள மெட்ரோ சோன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் குழாய் மூலமாக வீட்டு உபயோக இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் தற்பொழுது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்படி, வீட்டுக்கு வீடு மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைப்பது போன்று எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டு, சமையலறைக்கு நேரடியாக இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

எரிவாயு பயன்பாட்டை அளவிட தனி மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நுகர்வோருக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இணைய வழியில் கட்டணம் செலுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பை பெற 7,090 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் 6,500 ரூபாய் திரும்ப பெறும் கட்டணம் என்று ரோடன்ட் கேஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்தகட்டமாக அரும்பாக்கம், கோயம்பேடு, மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x